ஜப்பானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது.
இந்த கொண்டாட்டங்களுக்கு நடுவே ஜப்பானின் நோடா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஜப்பான் நாட்டின் நோடா நகரில் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
இந்த தகவலை அமெரிக்காவில் உள்ள புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நோடாவில் இருந்து கிழக்கே 91 கிமீ தொலைவிலும், நிலநடுக்கத்தின் ஆழம் 19.3 கிமீ என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது.
ஜப்பானில் புத்தாண்டுக்கு சற்று முன்பு இரவு 11.26 மணிக்கு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் போது ஏதேனும் உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இதேபோன்று திபெத்தில் இன்று ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக லேசான நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி ஜப்பானில் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் நாட்டின் வடகிழக்கு கடற்கரையை 3 மீட்டர் (10 அடி) உயரத்திற்கு சுனாமி தாக்கக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் கூறியது.
ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் மாகாணங்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
மேலும் பல துறைமுகங்களில் 20 முதல் 70 செ.மீ உயரத்தில் சுனாமிகள் காணப்பட்டதாக ஜே.எம்.ஏ தெரிவித்துள்ளது.
உலகின் மிக அதிக நிலநடுக்க பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அங்கு குறைந்தது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு நிலநடுக்கம் ஏற்படுகிறது.
பசிபிக் படுகையைச் சுற்றியுள்ள எரிமலைகள் மற்றும் கடல் அகழிகளின் “நெருப்பு வளையத்தில்” அமைந்துள்ள ஜப்பான், உலகின் 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களில் சுமார் 20% ஐ ஏற்படுத்துகிறது.
