சப்ரகமுவ மாகாண கூட்டுறவு சங்கத்தினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்காக 100 இலட்சம் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் (29) இரத்தினபுரியில் அமைந்துள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து, சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவிடம் கையளிக்கப்பட்டன.
இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரு மாவட்டங்களையும் சேர்ந்த பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், சனச சங்கங்கள் மற்றும் கூட்டுறவு மூலதனச் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த நிதியுதவியை வழங்கியுள்ளன.
இந்நிகழ்வில் உரையாற்றிய சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன,
தித்வா சூறாவளி காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் பல்வேறு நிவாரணங்களை வழங்கியுள்ளது.
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் தனது பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றியுள்ளது.
அரசாங்கம் நிவாரணத் திட்டங்களுக்காக பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டுள்ளது.
‘Rebuilding Sri Lanka’ கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் துஷ்பிரயோகம் செய்யப்படமாட்டாது.
கடைசிச் சதம் வரை 100 வீதம் அதன் மீது நம்பிக்கை வைக்க முடியும்.
அதனால்தான் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இக்கணக்கிற்கு பெருமளவிலான நிதி கிடைக்கப்பெறுகின்றது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்தி வருகின்றது என்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் சுஜீவா போதிமான்ன, கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் நிஷாந்த சமன் குமார, சபரகமுவ மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி புஷ்பகுமார திஸாநாயக்க மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்
