மூதூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இரு நண்பர்களிடம், வீடு கட்டித் தருவதாக கூறி அடையாளம் தெரியாத நபர்கள் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, “வீடு கட்டித் தருவதற்காக முன்பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்” என கூறியுள்ளனர்.
இதனை நம்பிய அந்த இரு நண்பர்களும், அவர்கள் குறிப்பிட்ட தொகையை சம்பத் வங்கியில் வைப்பு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர், வீடு கட்டித் தருவதாக கூறிய நபர்கள், கட்டடம் தொடர்பான படங்களையும் அனுப்பி தொடர்பை தொடர்ந்துள்ளனர்.
ஆனால், சில நாட்களுக்குப் பின்னர் அவர்களது தொலைபேசி இலக்கங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
பலமுறை தொடர்பு கொள்ள முயன்ற போதும், அழைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மோசடி நடந்ததை உணர்ந்த இரு நபர்களும் மூதூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட இந்த இரு நபர்களும் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது தங்களது பகுதியில் பெரும் சேதங்களை எதிர்கொண்டதாகவும், வீட்டுப் பொருட்கள் மற்றும் சில மீட்பு உபகரணங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதையும் அதோடு, குடும்பத்தில் அதிகமான பெண் பிள்ளைகள் இருப்பதையும் காரணமாக வீடு கட்டி தருகின்றோம் என்று காரணங்களை பயன்படுத்தி வீடு கட்டித் தருவதாக கூறி இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், அறிமுகமில்லாத நபர்களின் வாக்குறுதிகளை நம்பி முன்பணம் வழங்குவதற்கு முன் உரிய சரிபார்ப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
