தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உட்பட குழுவினர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி இரவு 8.40 மணியளவில் சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, களுக்கல விகாரைக்கு அருகில் குறித்த எம்.பி உள்ளிட்ட குழுவினர் தன்னை தாக்கி மோட்டார் சைக்கிளை கடத்திச் சென்றதாக 119 அவசர அழைப்பு பிரிவு மூலம் கொலன்ன பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் இரவு 10.10 மணியளவில் தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார, களுக்கலையில் இருந்து ஹல்வின்ன நோக்கி கெப் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, சூரியகந்த பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை குறுக்கே நிறுத்தி வீதியை மறித்து தாக்க முற்பட்டதாக கொலன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பொலிஸ் கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிள் களுக்கல விகாரைக்கு அருகில் உள்ள வீதியில் இருந்து கொலன்ன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த பொலிஸ் அதிகாரி கொலன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் நோயாளி அறிக்கையில் அவர் வெளியிட்ட சுவாசத்தில் மதுபான வாசனை வீசியதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதிகாரியின் சிறுநீர் மாதிரியில் போதைப்பொருள் அடையாளம் காணப்படாததால், அவர் மது அருந்தியிருந்தாரா என்பதை பரிசோதிக்க இரத்த மாதிரியைப் பெற்று அரச இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பின் கீழ் எம்பிலிபிட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
