அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இக்கட்டான சூழ்நிலைகளில் இராணுவம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செய்யும் பணிகள் மகத்தானவை – ஜனாதிபதி அநுர

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மதங்கள் என்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் என்ற வகையில் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்றுவதன் மூலம், வரலாற்றில் நமக்கு இருந்த பெருமை மற்றும் கெளரவத்துடன் தாய்நாட்டை மீண்டும் விரைவாக கட்டியெழுப்ப முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்தார்.

இன்று (21) முற்பகல் தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

நமது நாடு ஒரு சிறந்த பாரம்பரியத்தையும் வெற்றிகளையும் பெற்றிருந்தாலும், கடந்த சில தசாப்தங்களாக நாடு அனைத்து வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளாகியுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு, தாய்நாட்டை மீண்டும் உலகில் மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும் என்று தெரிவித்தார்.

ஒரு அரசாங்கமாகவும் ஜனாதிபதியாகவும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை, நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்துவேன் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அதற்கு தேவையான பொறிமுறைகளைத் தயாரிப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் தொழிலிலிருந்து, பொதுமக்களுக்கு சேவை செய்யும் சமூகப் பணியாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றி வருவதாக இங்கு தெரவித்தார்.

இன்று (21) முற்பகல் தியதலாவ, இராணுவ கல்வியியல் கல்லூரிக்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வீரமிக்க தலைவர்களை உருவாக்கிய இராணுவத்தின் சிறந்த பயிற்சி நிறுவனமான தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியின் 100 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வு இதுவாகும்.

வதிவிட கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண் 93, 94B குறுகிய கால பாடநெறி எண்23, வதிவிட பாடநெறி எண்62 மற்றும் தன்னார்வ பெண் கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண்19 ஆகியவற்றைச் சேர்ந்த 240 கெடட் உத்தியோகத்தர்கள் வெற்றிகரமான இராணுவப் பயிற்சிக்குப் பிறகு அதிகாரிகளாக இராணுவ சேவையில் இணைந்தனர். இவர்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த பல கெடட் உத்தியோகத்தர்களும் பயிற்றுவிக்கப்பட்டு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கெடட் உத்தியோகத்தர்களின் விடுகை அணிவகுப்பை பார்வையிட்டதுடன், திறமை வாய்ந்த கெடட் அணிக்கு விருதினையும், கெடட் வீரர்களுக்கு கௌரவ சின்னங்களையும், ஒவ்வொரு பாடநெறியிலும் முதலிடம் பெற்ற அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகளையும் வழங்கினார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் நாட்டிற்கும் மக்களுக்கும் இராணுவம் ஆற்றிய சேவை பாராட்டத்தக்கது என்றும், அண்மைய சூறாவளியின் போது மக்களை மீட்டெடுத்தல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை வழங்குவதில் ஆற்றிய சிறந்த பணிக்கு நன்றி தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

கெடட் உத்தியோகத்தர்களாக தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியைப் பெற்ற நீங்கள், இன்று அதிகாரிகளாக மாறியுள்ளீர்கள்.
இது உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறப்பு சந்தர்ப்பமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் தொழில் வாழ்க்கை முன்னோக்கி செல்ல, மேலும் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் அடைய வாழ்த்துகிறேன்.

உங்கள் பெற்றோர் இந்த தருணத்தில் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிறு வயதிலிருந்தே, அவர்கள் தங்கள் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்கள். இன்று, அந்த பெற்றோர்கள் உங்களைப் பற்றி பெருமைப்பட வேண்டிய ஒரு சிறப்பு தருணம் இது.

நமது தாய்நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இராணுவத்தின் மரியாதைக்குரிய வாளை தங்கள் கைகளில் ஏந்திய பிள்ளையைப் பெற்றிருப்பது பெற்றோருக்கு மிகுந்த பெருமையாகும். இன்று, உங்கள் பெற்றோருக்கு கொடுக்க வேண்டிய அதிகபட்ச மரியாதையையும் மதிப்பையும் நீங்கள் அளித்துள்ளீர்கள்.

அந்த பெற்றோரின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதன் மூலமும், இந்தத் தொழிலில் இருக்கும் கௌரவத்தையையும் மதிப்பையும் பாதுகாப்பதன் மூலமும் நீங்கள் மிகவும் சிறந்த முறையில் பணியாற்றுவீர்கள் என்றும் நான் நம்புகிறேன்.

மேலும், உங்கள் சிரேஷ்ட அதிகாரிகள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சிரேஷ்ட அதிகாரிகள், மிகுந்த அர்ப்பணிப்புடனும், சவாலான காலங்களிலும், இலங்கை இராணுவத்தின் கௌரவம், மதிப்பு மற்றும் தொழில்முறையைப் பாதுகாத்தனர்.

அந்த அதிகாரிகளின் மேற்பார்வை மற்றும் சரியான வழிகாட்டுதலின் கீழ், நீங்கள் பயிற்சி பெற்று இன்று அதிகாரிகளாக பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறீர்கள். இராணுவத் தளபதியும் பிற சிரேஷ்ட அதிகாரிகளும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தொழிலுக்கு அவர்கள் சேர்த்த கௌரவத்தையும் மதிப்பையும் நீங்கள் அதே வழியில் தொடர்ந்து பாதுகாப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அரசாங்கத்திற்கும், ஜனாதிபதியாக எனக்கும், உங்கள் மீது பாரிய எதிர்பார்ப்பு உள்ளது. நமது நாடு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது.

அந்த சவால்களை வெற்றிகொள்ள, இந்த தாய்நாட்டின் பாதுகாப்பு, அமைதி மற்றும் மக்களுக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த உங்கள் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளனர்.

நீங்களும் நானும் இன்று கால்களை வைத்திருப்பது, கடந்த காலங்களில், வீரச் செயல்கள் மூலம், நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கான போராட்டத்தில் உயிர்கள் தியாகம் செய்யப்பட்ட பூமியில் ஆகும்.

எனவே, கைவிட முடியாத ஒரு பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இலங்கை இராணுவமாக, நமது தாய்நாட்டின் மற்றும் அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அசைக்க

முடியாத பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இந்த விடயத்தில் உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது.

சூறாவளியினால் நமது நாடு பேரழிவைச் சந்தித்தது. மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

சிலருக்கு உணவு வழங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்னும் சிலரது உயிர்களைக் காப்பாற்றுவது ஒரு பெரிய சவாலாக அமைந்தது. அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு சவாலிலும் இலங்கை இராணுவம் பெரும் பங்காற்றியுள்ளது.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். படையினர் மிகவும் கடினமான பணியில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடுமையாக உழைத்து வருகின்றனர்.

உங்களுக்கு இருப்பது தொழில் ரீதியான பொறுப்பு மாத்திரமல்ல. பல்வேறு வகையான தொழில்கள் உள்ளன. உங்கள் நண்பர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கே உரிய பொறுப்பு மற்றும் மதிப்பு உள்ளது. நீங்கள் மிக உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ளீர்கள் என்றும் அதே நேரம் ஒரு பாரிய பொறுப்பு உங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்றும் நான் நினைக்கிறேன்,

நமது தாய்நாட்டை நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நமது தாய்நாடு பல தரப்பிலிருந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. ஒருபுறம், நமது அரச பொறிமுறை பலவீனமாகவும் வீழ்ச்சி அடைந்தும் இருந்த ஒரு சகாப்தம் இருந்தது.

நமது பொருளாதாரம் பெரும் சவாலுக்கு உள்ளாகி சரிவடைந்து கொண்டிருந்த ஒரு சகாப்தம் இருந்தது. நமது சமூகத்தின் நல்வாழ்வு முற்றிலுமாக தோழ்வி கண்ட ஒரு சகாப்தம் இருந்தது. மனித உறவுகள் பெறுமதியற்ற உறவுகளாக மாறிக்கொண்டிருந்தன. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. மதஸ்தலங்களுக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது.

நமது நாடு அனைத்து மனித உறவுகளும் உடைந்த ஒரு சகாப்தத்தில் நுழைந்து கொண்டிருந்தது. அதன்போது நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு என்ன? நாம் வரலாற்று பாரம்பரியத்தையும் வரலாற்று சாதனைகளையும் கொண்ட ஒரு நாடு. ஆனால் நமது நாடு எல்லா வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளானது.

இப்போது நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு, இந்த தாய்நாட்டை உலகில் உயர்ந்த, மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும். ஒவ்வொருவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் உள்ளன. ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும், நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் தேவையான பொறிமுறையைத் தயாரிக்கவும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் ஒரு தொழிலாக அன்றி, மாறாக மக்களுக்கு சேவை செய்யும் ஒரு சமூகப் பணியாக மாற்றும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கும் அதே போன்ற பொறுப்புகள் உள்ளன. இங்கு கூடியிருக்கும் பெற்றோருக்கும் நமது நாட்டிற்கான பொறுப்புகள் உள்ளன. நமது மதஸ்தலங்களுக்கும் பொறுப்புகள் உள்ளன.

ஒருவருக்கொருவர் எதிராகச் செயல்படுவதன் மூலமோ அல்லது ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதன் மூலமோ இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்கான உறுதியான தீர்மானத்துடன் நாம் அனைவரும் செயல்பட்டால் மாத்திரமே நாம் ஒரு நாடாக முன்னேற முடியும்.

ஒரு நாடாக நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பை இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்துவோம் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

மேலும் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகள் மற்றும் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை முறையாக நிறைவேற்றுமாறு பொதுமக்களையும் நான் அழைக்கிறேன்.

நாம் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் தைரியமாக தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற முடிந்தால், வரலாற்றில் நம் நாடு பெற்ற பெருமை மற்றும் கௌரவத்துடன் தாய்நாட்டை மிக விரைவில் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று அழைப்பு விடுக்கிறேன்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.என். மெதகொட உள்ளிட்ட இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறும் கெடட் அதிகாரிகளின் பெற்றோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

மூடப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடை பண்ணைகள்!

புதிய 4,718 அதிபர் நியமனங்கள் :கல்வி அமைச்சர்

கச்சதீவு புனித திருவிழா – கொரோனா வைரஸ் தொடர்பில் விசேட நடவடிக்கை