புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கீழ் கடமையாற்றும் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோக்தர்களும் நேற்று (19) வெள்ளிக்கிழமை முதல் அனர்த்த நிவாரண சேவைகளில் இருந்து மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்படும் நிவாரணம் வழங்கல் மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கல் உள்ளிட்ட சகல அனர்த்த நிவாரண சேவைகளில் இருந்தும் தாங்கள் விலகிக் கொள்வதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் கற்பிட்டி கிளை மற்றும் அகில இலங்கை பொருளாதார உத்தியோகத்தர்கள் சங்கத்தின் கற்பிட்டி கிளை என்பன இணைந்து எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குற்பட்ட 31 கிராம சேவகர் பிரிவுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வீட்டை சுத்தம் செய்ய வழங்கப்படும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சில கிராம சேவகர் பிரிவுகளில் உலர் உணவுப் பொதிகள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கும் கிராம உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது தொடர்ச்சியாக அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவது, அவர்களின் கடமைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்துவது மற்றும் ஆலங்குடா பகுதியில் நேற்றுமுன்தினம் (18) இரவு உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்கும் போது அங்கு கடமையில் இருந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்தே தாம் இந்த அனர்த்த நிவாரண சேவைகளில் இருந்து விலகிக் கொள்வதாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கீழ் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தெரிவித்துள்ளனர்.
எனினும், மக்களுக்கான தமது வழமையான பணிகளை தாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் கிராம உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
-ரஸீன் ரஸ்மின்
