உள்நாடுபிராந்தியம்

அநுராதபுரத்தில் பாரிய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது

வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றினை உடைத்து ரூ. 5 கோடிக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த பிராடோ ஜீப் வண்டி மற்றும் தங்க நகை பணம்,கையடக்க தொலைபேசிகள் என்பவற்றினை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பல் உறுப்பினர்கள் 6 பேரை அநுராதபுரம் கல்னேவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்னேவ பொலிஸ் பிரிவின் புள்னேவ பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றினை கடந்த 07ஆம் திகதி இரவு உடைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் கல்னேவ பொலிஸ் நிலையத்தில் வர்தகரினால் செய்த முறைப்பாட்டினை அடுத்து தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுவந்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நேற்று முன்தினம் (14) குருநாகல் மாவத்தகம மற்றும் வில்கமுவ பகுதியில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6 பேரை கைது செய்தனர்.

அத்துடன், 10 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின், 10 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திய கை உறை 4 கூரிய கத்தி 4 மற்றும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், வேன்,லொறி என்பவற்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 34,36,38,40,43,48 வயதுடைய குருநாகல், நுககொள்ள, மாவத்தகம, மெல்சிறிபுர மற்றும் கண்டி பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர்களினால் கொள்ளையடிக்கப்பட்ட ஜீப் வண்டியை மீகலாவ பகுதியில் விட்டுச் சென்றுள்ள போது பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கொள்ளையடித்த பணத்தில் ரூ. 59 இலட்சத்து 39,000 மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் என்பவற்றினை பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

சந்தேகநபர்களை நேற்று (15) கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதி மன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவிற்கு அமைய இம்மாதம் 18 ஆம் திகதி வரைக்கும் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாத்தளை லக்கல பகுதியிலும் இவர்கள் பாரிய கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் கல்னேவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரொஹான் முனசிங்க மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் இலங்க சிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறப்பு

‘ஜனாதிபதியை தமிழ் முற்போக்கு கூட்டணி வியாழன்று சந்திக்கும்’ – மனோ

வவுனியா உணவகம் ஒன்றில் உளுந்து வடைக்குள் சட்டை ஊசி

editor