இரத்தினபுரி மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுச் சேவைகளை மீளமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்றைய தினம் (10) மாவட்ட இணைத் தலைவர்களான சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார ஆகியோர் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களை துரிதமாக நிரந்தர வீடுகளில் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் இம் மாதம் 16 ஆம் திகதி திறக்கவும் மற்றும் அனர்த்தம் காரணமாக பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு நிலையங்களை வேறு மாற்று இடங்களுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இரத்தினபுரி மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள், மின்சாரம், நீர், பாடசாலைகள், அரச நிறுவனங்களை துரிதமாக மீளமைக்கத் விரைவில் நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட தோட்ட மக்களுக்கு மாற்று இடங்களில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அனர்த்தம் காரணமாக பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள தோட்ட மக்களை தற்காலிக குடியிருப்புக்களில் தங்க வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் காவத்தை ஓப்பாத்த தோட்டத்தில் இருந்த இராணுவ பாதுகாப்பு முகாம் அங்கிருந்து அகற்றப்பட்டதையடுத்து அப்பிரதேசத்தில் மதுபான விற்பனை மற்றும் தீய செயல்கள் அதிகரித்து காணப்படுவதாக தனக்கு முறைப்பாடு கிடைத்த வண்ணம் உள்ளது.
எனவே மேற்படி பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு மையம் ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கோரிக்கையை முன்வைத்தார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த புஷ்பகுமார, சுனில் ராஜபக்ஷ, ஜனக்க சேனாரத்ன, வருண லியனகே, பீ. ஆரியவங்ச, உப்புல் கித்சிறி, இரத்தினபுரி மாநகர சபையின் நகரபிதா இந்திரஜீத் கட்டுகம்பொல, மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனிதா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கே.ஜீ.எஸ்.நிசாந்த உட்பட அரச அதிகாரிகள் மற்றும் தோட்ட நிர்வாக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்
