‘திட்வா’ புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தீர்மானித்துள்ளது.
இந்த அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழான உதவிகள், இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் வழங்கப்படும் கடன் வசதிக்கு மேலதிகமாக வழங்கப்படும் நிதியிடல் வசதியாகும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் நாட்டிற்கு கிடைக்கவுள்ள ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘திட்வா’ புயலால் ஏற்பட்ட அழிவிலிருந்து நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, இலங்கையினால் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி நிதி உதவிக்கான அவசர கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் எவன் பப்பஜோர்ஜியோ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
