அரசியல்உள்நாடு

அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்வோம் – எஸ். எம். மரிக்கார் எம்.பி

நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியமைக்காக ராஜபக்ஷர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோன்று நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளோம்.

இந்த அனர்த்த நிலைமை 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் போலவே மிகவும் கொடுமையான சம்பவமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியமைக்காக ராஜபக்ஷக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதைப் போலவே, தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக ஒரு குற்றவியல் வழக்கை தாக்கல் செய்ய எதிர்பார்க்கிறோம். கொழும்பில் உள்ள வணிக சமூகத்தின் பேச்சைக் கேட்கும் ஒரு கைப்பாவை இளவரசரே ஜனாதிபதியாக உள்ளார்.

பாராளுமன்றம் கூடியபோது, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை குறித்து விவாதிக்க போதுமான கால அவகாசத்தை நாங்கள் கோரிய போதும், அரசாங்கம் தன்னிச்சையாக எதிர்க்கட்சிக்கு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டது.

ஏனெனில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்கத் தேவையான வெற்றிகரமான திட்டங்களை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. குறிப்பாக, நவம்பர் 12ஆம் திகதியே இது குறித்த முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பொதுவாக பெரிய நீர்த்தேக்கங்கள் மூன்று பணிகளைச் செய்கின்றன: ஒன்று, உற்பத்தி இரண்டு, விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரை வழங்குதல்; அத்துடன் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதும் அதன் மூலம் நடக்கிறது.

எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, தண்ணீரை படிப்படியாக வெளியேற்ற வேண்டும் என்று பொறியியலாளர்கள் அறிவித்திருந்தனர்.

அந்த அறிவுரையைப் புறக்கணித்து, மீண்டும் ஒருமுறை தங்கள் கர்வம் மற்றும் முட்டாள்தனத்தைக் காண்பித்து, அப் பணிகளைச் செய்யாமல், ஒரேயடியாக வான் கதவுகளைத் திறந்துவிட்டதாலேயே இந்த மாபெரும் குற்றம் நடந்துள்ளது.

குறிப்பாக, களனி கங்கையைச் சுற்றிப் பார்க்கும்போது, ஆற்று முகத்துவாரத்தை அகலப்படுத்தும் வேலைகளைச் செய்திருக்க வேண்டும்.

அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி தற்போது நாட்டையே குழப்பி வைத்திருக்கின்றனர்.

ஜனாதிபதியின் தலைமையில் நடந்த கலந்துரையாடலிலும், பிரதமரின் தலைமையிலான கலந்துரையாடலிலும், அத்துடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எவ்வாறு எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் விளக்கினோம்.

ஆனால் அரசாங்கம் அவற்றை செவிமடுக்கவில்லை. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்குப் படகுகளை உரிய முறையில் வழங்குவதும், அதற்காகத் தரைப்படை மற்றும் கடற்படையை போதுமான அளவு ஈடுபடுத்துவதும் மந்தமாகவே இடம்பெறுகிறது.

பாராளுமன்றத்தில் நாங்கள் எதிர்பார்த்தது, அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும் என்பதே. ஏனென்றால், இது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைப் போலவே மனிதாபிமானமற்ற ஒரு அழிவாகும்.

எனவே, நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியமைக்காக ராஜபக்ஷக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதைப் போலவே, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு குற்றவியல் வழக்கை தாக்கல் செய்ய நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஏனென்றால், இறந்த ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு நபருக்கும் இந்த அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தும், முன்கூட்டிய ஏற்பாடுகளைச் செய்யாமல் நடந்துகொண்டதற்காக அவர்களுக்கு எதிராக நாங்கள் வழக்குத் தொடரத் தயாராக உள்ளோம் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்

குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903

பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 15 பேர் காயம்

editor