உள்நாடு

அசாதாரண சூழ்நிலை – ஜுமுஆத் தொழுகை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட அறிவிப்பு

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

எமது நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடுமையான மழை, பலத்த காற்று, மலைச்சரிவு அபாயம் மற்றும் வெள்ளநீர் காரணமாக பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பல குடும்பங்கள் சேதங்களுக்கு உள்ளாகி, தற்காலிக பொதுக் கட்டிடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இவ்வாறான அவசர மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில், மார்க்கக் கடமைகள் குறித்து முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இஸ்லாம் தெளிவான வழிகாட்டலை வழங்குகிறது.

ஜுமுஅத் தொழுகை தொடர்பான வழிகாட்டல்

மிகவும் கடுமையான மழை, பலத்த காற்று, வெள்ளநீர், பாதைகளில் காணப்படும் சேற்று–களிமண் மற்றும் இதனால் மஸ்ஜிதை நோக்கி பயணிப்பதில் ஏற்படும் சிரமம் அல்லது ஆபத்து போன்ற காரணங்களுக்காக, ஜுமுஅத் தொழுகைக்கு சமூகமளிக்க வேண்டும் என்ற கடமை அவர்கள் மீது நீங்குகிறது என்று மார்க்க அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆகவே இத்தகைய சூழ்நிலையில், மஸ்ஜிதிற்கு வருவது கடினமாக இருப்பவர்கள் மீது ஜுமுஅத் தொழுகைக்கு சமூகமளிக்க வேண்டும் என்ற கடமை நீங்கி விடுவதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் அல்லது தாம் இருக்கும் இடங்களில் லுஹ்ர் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதான் தொடர்பான வழிகாட்டல்

மிகுந்த பாதிப்புகள் காணப்படும் பகுதிகளில், மஸ்ஜிதுக்கு வருவதில் சிரமம் அல்லது ஆபத்து ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், முஅத்தின் அதான் சொல்லும் போது “ஸல்லூ ஃபீ ரிஹாலிகும் “உங்களது இருப்பிடங்களில் தொழுது கொள்ளுங்கள்”
என்று அறிவிப்புச் செய்வது நபி ﷺ அவர்களின் நடைமுறையைப் பின்பற்றுவதாகும்.

ஆகவே முஅத்தின்கள் அதான் சொல்லி முடிந்ததும் அல்லது “ஹய் யஅலஸ் ஸலாஹ்” சொல்லி முடிந்ததும் இதனை தேவைக்கேற்ப அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன், தாம் இருக்கும் இடங்களிலிருந்து மஸ்ஜிதுக்கு அல்லது வெளியே செல்லும் விடயங்களில், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

அல்லாஹ் தஆலா எமது நாட்டையும் நாட்டு மக்களையும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாத்தருள்வானாக. ஆமீன்.

அஷ்ஷைக் எம்.டி.எம் ஸல்மான்
பதில் செயலாளர் – பத்வா குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல உலமா

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல உலமா

அஷ்ஷைக் எம்.ஜே அப்துல் ஹாலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல உலமா

Related posts

புத்தளம் பிரதேச செயலாளரை அச்சுறுத்திய அலி சப்ரி ரஹீம் MP!

பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் எவருக்கும் கருத்து தெரிவிக்க முடியாது – பதில் பொலிஸ் மா அதிபர்

முகக்கவசம் அணியத் தவறிய 18 பேர் கைது