பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஷர்ரப் முதுநபீன் 15 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கில் இன்று (25) அவரின் சட்டத்தரணிகளால் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட்டார்.
முஷர்ரப் அவர்களின் இணைப்பாளராக செயற்பட்ட பொத்துவிலைச் சேர்ந்த நியாஸ் என்பவரிடம் ஒரு கோடி ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று அதற்காக ஒரு காசோலையையும் கையெழுத்திட்டு நியாஸிடம் கொடுத்துவிட்டு பணத்தை இதுவரைக்கும் மீளத் தராமல் ஏமாற்றி வருவதாக SCIBல் நியாஸ் என்பவர் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார்.
அதைத் தொடர்ந்து வாக்கு மூலத்தைப் பெறுவதற்காக முஷர்ரப் அவர்களை பல முறை அழைத்தும் சமூகமளிக்காத நிலையில் பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழக்கொன்றை முஷர்ரப் அவர்கள் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இணங்கிக் கொண்டதற்கிணங்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான முஷர்ரப் அவர்கள் இன்று பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு பிரயாணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வழக்கு எதிர்வரும் டிசம்பர் 2ம் திகதி மீண்டும் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் வருகின்றது.
பாதிக்கப்பட்ட நியாஸ் அவர்கள் சார்பில் சட்டத்தரணி றாஸி ஜாபீர் அவர்களும் பண மோசடியில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்ப்ட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான முஷர்ரப் முதுநபீன் அவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சாதீர், உவைஸ், முகைதீன் ஆகியோர் உட்பட பலர் ஆஜராகி இருந்தனர்.
