உள்நாடுபிராந்தியம்

மூதூர் ஜாயா நகர் பராமரிப்பற்ற காணிகளால் டெங்கு பரவல் – மக்கள் கடும் குற்றச்சாட்டு

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட காணிகளின் காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக அங்குள்ள பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இந்தப் பகுதியில், செல்வந்தர்கள் பல காணிகளை வாங்கியுள்ளதாலும், அவற்றை நீண்டகாலமாக பராமரிக்காமல் கைவிட்டதாலும், இந்ங நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமீபமாக மூதூரில் பெய்துவரும் அடைமழையால், இந்த காணிகள் பெருமளவு நீரில் மூழ்கி, நுளம்பு தொற்றுக்கான உக்கார தளமாக மாறியுள்ளன.

மேலும், காணிகளுக்குள் வீசப்பட்டுள்ள திடக்கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், கொள்கலன்கள் முதலியவை நுளம்பு பெருகுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன என்று மக்கள் சாடுகின்றனர்.

இந்த சூழ்நிலை காரணமாக, அருகிலுள்ள பல குடும்பங்களில் டெங்கு நோய் பரவியுள்ளதுடன், பலர் தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குறிப்பாக சிறுவர்களே அதிக அளவில் டெங்கு தொற்றுக்குள்ளாகி வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டபோதும், இதுவரை எந்தவொரு தீர்வும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், ஜாயா நகர் பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல தேவையான வடிகால் அமைப்பு இல்லாததே நிலைமை மேலும் மோசமடைவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

இதன்படி, முன்னாள் மூதூர் பிரதேச தவிசாளர் இந்தப் பகுதியில் வடிகால் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு இட அபிவிருத்திக்காக பயன்படுத்தியதாக கிராம முக்கியஸ்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுத்து பராமரிப்பற்ற காணிகளை சுத்தம் செய்தல், வடிகால் வசதி அமைத்தல் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டுக்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச சபை மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் தீவிரமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

மிரிஹானவில் கைது செய்யப்பட்டோருக்கு மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் உதவும்

அரச சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ய விசேட குழு

பலாத்கார பிரேத எரிப்பை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம் [VIDEO]