அரசியல்உள்நாடு

நெல் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பது தொடர்பான கலந்துரையாடல்

நெல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

நீண்ட காலமாக நெல் விளைச்சல் தொடர்பில் கவனம் செலுத்தி, நெல் விவசாயியைப் பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் ஏனைய பயிர்களுக்கு எந்த குறிப்பிட்ட திட்டமும் தயாரிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த நெல் விவசாயிகளைப் போன்று, அனைத்து விவசாயிகளையும் பாதுகாத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

விவசாயிகள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என்று தனித்தனியாக செயற்படக் கூடாது என்றும், இனிமேல் அனைத்து தரப்பினரும் ஒரே குழுவாக இணைந்து விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அரிசி இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நெல் உற்பத்தியை மேலும் அதிகரிப்பது மற்றும் நெல் கொள்முதல் விலை முறையை நெறிப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், உற்பத்திச் செலவுகளைக் குறைத்து, விவசாயிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், நியாயமான விலையில் நுகர்வோருக்கு தரமான அரிசியை வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், உர மானியத் திட்டத்தை செயல்படுத்தும்போது, உலக சந்தையின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உர மானிய விலையை நிர்ணயிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

விவசாயிக்கு அநீதி ஏற்படாத வகையில் நெல்லுக்கு நிலையான விலையை நிர்ணயம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டதுடன், களஞ்சியப்படுத்தல், நெல் உலர வைத்தல் உள்ளிட்ட ஏனைய உற்பத்தி நடவடிக்கைகளில் விவசாயிகளின் வசதிகளை மேம்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

எதிர்காலத்தில் உற்பத்திச் செலவுகளைக் கணக்கிடுவது போன்ற முடிவுகளை எடுக்கும்போது மாவட்ட மட்டத்தில் உள்ளீடுகளின் உற்பத்திச் செலவுகள் குறித்து அறிக்கை வழங்குமாறும், அந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் லால்காந்த சுட்டிக்காட்டினார்.

அரச சேவைக்குத் தேவையான வசதிகள் பூர்த்தி செய்யப்படாத சந்தர்ப்பத்தில் கூட, நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதை மற்றும் உர மானியங்கள் உள்ளிட்ட வசதிகள், வழங்கப்பட்டன என்றும், அரச நிறுவனங்களுக்கு அதிகாரிகள், தேவையான வாகனங்கள் மற்றும் இயந்திரங்களைப் பெறுதல் உள்ளிட்ட தொடர்புடைய துறைகளில் உள்ள வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க முதல் முறையாக ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் தலையிட்டதற்காக இதன்போது அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த விவசாயிகள், நெல் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பீ. சரத், பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன, விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ. ஏ. ஆர். துஷார விக்ரமாரச்சி, நெல் சந்தைப்படுத்தல் சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், விவசாயத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் உட்பட நெல் விவசாயிகள் குழுவினரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் துப்பாக்கிச் சூடு

editor

திங்கள் முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி

தேசிய இளைஞர் படையணிக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

editor