உள்நாடு

பாராளுமன்ற பெண் பணியாளர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – இறுதி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரித்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அளகப்பெரும அவர்களினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் நேற்று (24) கையளிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பெண் பணியாளருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக 2025.01.07ஆம் திகதி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களினால் சபா மண்டபத்தில் உரையாற்றும்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டதுடன், குறித்த விசாரணை தொடர்பில் முறைப்பாடு செய்த நபர் திருப்தியடையாத காரணத்தினால் இது பற்றி வெளியக விசாரணையை நடத்துவதற்குப் பாராளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழுவில் 2025.07.25ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அளகப்பெரும அவர்களினால் மேற்படி விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நேற்றையதினம் கௌரவ சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின்படி, விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளிலிருந்து முறைப்பாடு செய்த பெண் பணியாளர் எவ்வித பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகவில்லை என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அதே பிரிவில் வேறு எந்த பெண் பணியாளருக்கும் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லையென்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

டீசல் இன்னும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே..

கடந்த 24 மணித்தியாலத்தில் 42 பேர் கைது

கடவுச்சீட்டு பிரச்சினை – திங்கள் முதல் முடிவுக்கு வருகிறது – அமைச்சர் விஜித ஹேரத்

editor