இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த FIASTA 25 வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு 2025.11.22 ஆம் திகதி பீடத்தின் பிரதான அரங்கில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஆர். ஹனாஸ் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் ஷேக் எம்.எச்.ஏ. முனாஸ் கலந்து கொண்டு உரையாற்றிய துடன் வெற்றிக்கின்னங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
நிகழ்வின் போது பீடத்தின் அரபு மொழி துறையின் தலைவர் கலாநிதி ஏ.எம். றாசிக், பல்கலைக்கழக பிரதி சிரேஷ்ட மாணவர் ஒழுக்காற்று அதிகாரி எம்.ஏ. ஜி. பெரோஸ் மற்றும் உடற்கல்வி துறையின் பணிப்பாளர் ஐ.எம்.கடாபி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
நிகழ்வை சிறப்பூட்டும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகிகள், விருது பெற்ற மாணவர்கள், போட்டியாளர்கள் மற்றும் மாணவ–மாணவியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பீடாதிபதி அஷ் ஷேக் எம். எச். ஏ. முனாஸ் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் உற்சாகமூட்டும் விதத்தில் உரையாற்றினார்.
அவரது உரையில் கல்வியில் புத்தக அறிவு மட்டும் போதாது என்றும் “Knowledge – Skill – Attitude” திறமைகள், நல்ல அணுகுமுறை என்பனவும் மிக அவசியம் என வலியுறுத்தினார்.
இந்த திறன்களை வளர்ப்பதில் co-curricular activities பெரிய பங்கு வகிக்கின்றன என்றும், தற்போதைய மாணவர் பேரவை மற்றும் முந்தைய பேரவைகள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி உள்ளதைப் பார்த்து பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.
13 ஆண்டுகளாக கவனிக்கப்படாத பீடத்தின் கட்டிடம், வண்ணம் அடிக்கப்படாமல் இருந்ததையும் சுற்றுப்புறம் சீரற்ற நிலையில் இருந்ததையும் நினைவுபடுத்தினார்.
ஆனால், மாணவர் பேரவை, முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் இணைந்த முயற்சியால் கட்டிடம் அழகாக மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய வோட் ரூம், மேம்படுத்தப்பட்ட லேண்ட்ஸ்கேப், மற்றும் கற்றல் உபகரணங்கள் ஆகியவை மாணவர்களின் பங்களிப்பால் உருவாக்கப்பட்டன என்றார்.
கிண்ணியாவை தளமாகக் கொண்ட ஒரு சமூக நிறுவனம், 33 மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்குவதாகவும் அந்த நிறுவனம் பீடத்தின் கட்டிட மேம்பாட்டிற்கான மெட்டீரியல் களையும் வழங்கியது என்றும் தெரிவித்தார்.
அரசாங்க நிதி நெருக்கடியில் இருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான உதவிகளுடன் எந்த வித நிதி கையாடல் இல்லாமல் இந்த வேலைகள் நிறைவேற்றப்பட்டதை அவர் பாராட்டினார்.
உண்மையான முயற்சிகளுக்கு எதிர்ப்பும் விமர்சனமும் வருவது சாதாரணம் என்றும் விமர்சனமில்லா சூழல் நயவஞ்சகத்தின் அடையாளம் என்று மாணவர்களுக்கு நேர்மையான அறிவுரையையும் வழங்கினார்.
பீடம் செய்த நல்ல பணிகளுக்கு சில மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், “அல்லாஹ் அனைத்தையும் சரிசெய்வான்,”என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
FIASTA 25 விருது வழங்கும் நிகழ்வு, மாணவர்களின் வெற்றிகளை மட்டுமல்லாமல், பீட முன்னேற்றம், மாணவர் பங்குபற்றல், சமூக ஆதரவு, கல்வி தரம் ஆகியவற்றையும் வெளிப்படுத்தும் மேடையாக அமைந்தது. FIASTA 25 விருது வழங்கும் நிகழ்வில், மாணவர் ஒன்றியத் தலைவர் ஆர். ஹனாஸ் அஹமட் மாணவர்களின் திறன் மேம்பாடு, பீட முன்னேற்றம் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்து உணர்வுபூர்வமாக உரையாற்றினார்.
அவர் தனது உரையின்; பல்கலைக்கழக மாணவர்கள் புத்தக அறிவை மட்டுமல்ல, Hard skills (கற்றல் திறன்கள்) Soft skills (நடத்தை, வழிநடத்தல், கலந்துரையாடல், தன்னம்பிக்கை) என்பவற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்பது குறைந்து வருவதை அவர் கவலையுடன் குறிப்பிட்டார். “மாணவர்கள் இலை மறை காய் போல; அவர்களின் மறைந்த திறன்களை வெளிக்கொணர்ந்து தான் நாம் முன்னேற்றம் அடையலாம்” என அவர் எடுத்துரைத்தார்.
மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகத்தை மனதால் நேசித்தால், அவர்கள் எங்கு சென்றாலும் வெற்றியாளர்களாக இருப்பார்கள், நல்ல ஒழுக்கம் மற்றும் புகழ் எங்கும் பறைசாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களது ஒவ்வொரு முயற்சியிலும் ஆதரவளித்த பீடாதிபதி அஷ் ஷேக் எம். எச். ஏ. முனாஸ் அவர்களுக்கு, மாணவர் ஒன்றியம் சார்பில் அவர் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்தார்.
“எந்த முயற்சியையும் மறுக்காமல் ஊக்குவித்த தலைவர்,” “எங்களுக்கு உத்வேகம், வழிகாட்டல் அளித்தவர்” என அவர் பாராட்டினார்.
-நூருல் ஹுதா உமர்
மாணவர்கள் அழுத்தமான சூழல்களில் இருக்கும் போது, அவர்கள் முதலில் செல்லும் இடம் “எங்கள் பீடாதிபதியின் அறை”.அங்கே அவர்கள் பெறும் ஊக்கமும் அன்பும், பல்கலைக்கழகத்தை ஒன்றுபட்டு கட்டியெழுப்ப வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது எனவும் அவர் தெரிவித்தார்.
