மாலைத்தீவில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகப் போலி விளம்பரங்களை வெளியிட்டு, இலங்கைத் தொழிலாளர்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாலைத்தீவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இது தொடர்பில் தமக்குத் தகவல் அளித்துள்ளதாக அப்பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, Whatsapp, Facebook, Linkedin போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, இந்த மோசடிக்காரர்கள் இலங்கைத் தொழிலாளர்களுக்கு மாலைத்தீவில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகப் போலி விளம்பரங்களை வெளியிட்டு, அதற்காகப் பணத்தை அறவிட்டு, பல்வேறு வழிகள் ஊடாக ஆட்களை மாலைத்தீவிற்கு அனுப்பி வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவ்வாறு மாலைத்தீவிற்குச் சென்றவர்களுக்கு, 60,000 முதல் 80,000 ரூபா வரை மாதச் சம்பளத்துடன் கூடிய வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களிடமிருந்து 350,000 முதல் 500,000 ரூபா வரை மேலதிகப் பணம் அறவிடப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாலைத்தீவிலோ அல்லது வேறிடங்களிலோ வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மோசடிக்காரர்கள் சிலர், திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் இவ்வாறான பிரச்சாரங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேலை தேடுவோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், பணியகத்தின் அனுமதிபெற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக மட்டுமே வேலைவாய்ப்புகளுக்குச் செல்வது சிறந்தது எனவும், சுயவழியில் வேலைவாய்ப்புகளுக்குச் செல்வதாயின் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
