போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக கட்சி தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது X பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தென் கடற்பகுதியில் நேற்று (20) போதைப் பொருட்களுடன் மீன்பிடிப் படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றிய சம்பவம் தொடர்பில், ஒருவரை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
இது தொடர்பில் வினவியபோது, கைது செய்யப்பட்டவர் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினால் குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகும் அதில் இருந்த 6 மீனவர்களும் நேற்று மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பாதுகாப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் படகில் இருந்து 5 பைகளில் 100 பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த 115 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 13 பைகளில் 200 பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த 261 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
