ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் நொடர்பில் பாராளுமன்றத்தில் பேசிய போதிலும், அரசாங்கத்திடமிருந்து எந்த சாதகமான செய்தியும் கிடைக்கவில்லை.
2020-2024 இடைப்பட்ட காலப்பிரிவில் பாதிக்கப்பட்ட 154,000 பேருக்காக வேண்டியும் முடிந்தவரை குரல் கொடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்றைய (19) நாளுக்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பொல்துவ சந்தியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஓய்வூதியோர்களின் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் குறித்த ஆர்ப்பாட்ட இடத்திற்குச் சென்று அவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்திடமிருந்து பதில் கிடைக்கும் வரை, இவர்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்கும் வரை நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கும் கூட குறைநிரப்பு மதிப்பீட்டைக் கொண்டு வருவதன் மூலம் இதைத் தீர்த்து வைக்கலாம்.
வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் இந்த குறைநிரப்பு மதிப்பீட்டை முன்வைக்க முடியும்.
அரசாங்கம் ஏன் இவ்வாறானதொரு நடவடிக்கையை எடுக்காதிருக்கிறது என்பதில் பிரச்சினை காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
