உள்நாடுவீடியோ

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொகவந்தலாவையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (17) உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதி ஊடாக முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிப் பெண் ஒருவரை, திருக்கோவில் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நபர் இடைமறித்து, தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த பெண் அறுகம்பே சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த நபரின் புகைப்படத்தை ஊடகங்கள் ஊடாக பொலிஸார் வெளியிட்டு, அவர் தொடர்பாகத் தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து குறித்த நபர் தொடர்பாக நேற்று முன்தினம் (16) விசாரணைகளை மேற்கொண்ட திருக்கோவில் பொலிஸார், அவர் 25 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையான போகவந்தலாவையைச் சேர்ந்தவர் எனவும், களுவாஞ்சிகுடி எருவில் பிரதேசத்தில் திருமணம் முடித்து கடந்த சில வருடங்களாகத் திருக்கோவில் பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டறிந்தனர்.

இதனையடுத்து அவர் வாடகைக்கு இருந்த வீட்டை முற்றுகையிட்டபோது, அவர் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குச் சென்றுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்றபோது அவர் அங்கும் தலைமறைவாகியுள்ளார்.

பின்னர், மருதமுனை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில், தனது தலையை மொட்டையடித்து தோற்றத்தை மாற்றிக் கொண்ட நிலையில் இருந்தபோது, குறித்த நபரை அங்கு வைத்து கைது செய்து பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர் இன்று (17) பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

-சரவணன்

வீடியோ

Related posts

ஜெரோம் பெர்னாண்டோவின் 09 வங்கிகளை சோதனை செய்ய நீதிமன்றாம் அனுமதி!

தொழில் வாய்ப்பு எண்ணிக்கையை அதிகரித்த கொரியா

ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி