ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் 26ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் சனிக்கிழமை நேற்று (08) சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
11ஆம் திகதி வரை சவுதியில் தங்கியிருக்கும் அமைச்சர் விஜித ஹேரத், ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் உயர்மட்ட அமர்வுகளில் பங்கேற்பார் என்பதுடன், பல உறுப்பு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தவுள்ளார்.
1975இல் நிறுவப்பட்ட ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் ஸ்தாபக உறுப்பினராக இலங்கை உள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத்தின் இந்தப் பயணம், உலக சுற்றுலா அமைப்பின் மற்றைய உறுப்பு நாடுகளுடனான சாத்தியமான ஒத்துழைப்புகள் மூலம் இலங்கையின் சுற்றுலா நிகழ்ச்சி நிரலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
-எம்.மனோசித்ரா
