முல்லைத்தீவு -மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நேற்று (30) பொலிஸ் ஜீப் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
ஐயன்கன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான ஜீப் வண்டி ஒன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு சென்று மீண்டும் திரும்பி முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, திடீரென மாடுகள் குறுக்கே வந்தமையால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த ஜயன்கன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகள் சிறுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில், இருவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் ஜீப் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
