உலகம்

போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாக கூறிய இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் – நம்பிக்கை இழந்துள்ள காசா மக்கள்

காசாவில் போர் நிறுத்தம் மீண்டும் அமுலுக்கு வருவதாக அறிவித்த பின்னரும் இஸ்ரேல் அங்கு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு இதில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் காசாவில் அமுலில் இருக்கும் பலவீனமான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அடிக்கடி மீறுவதோடு கடந்த செவ்வாய் தொடக்கம் புதன்கிழமை காலை வரை நடத்திய சரமாரி தாக்குதல்களில் 104 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

பின்னர் போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.

எனினும் கடந்த புதன்கிழமை இரவு இஸ்ரேல் மீண்டும் காசாவில் தாக்குதல்களை ஆரம்பித்தது.

பெயித் லஹியாவில் இடம்பெற்ற இந்த வான் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக அல் ஷிபா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

தமது துருப்புகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.

போர் நிறுத்த உடன்படிக்கையின்படி இஸ்ரேலிய துருப்புகள் நிலைநிறுத்தப்படும் என்றும் உடன் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒன்றுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று கான் யூனிஸின் கிழக்கே இஸ்ரேல் நேற்று (30) 10 வான் தாக்குதல்களை நடத்தியதாகவும் வடக்கு காசாவின் காசா நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் செல் குண்டுகளை வீசியதாகவும் பார்த்தவர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் பலவீனமான போர் நிறுத்தத்தை முறிக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது.

‘எமக்கு மற்றொரு போர் தேவையில்லை என்பதால், மீண்டும் போர் வெடிக்கும் என்று நாம் அச்சத்தில் இருக்கிறோம்.

இரண்டு ஆண்டுகளாக நாம் இடம்பெயர்வுகளால் வேதனைப்பட்டுள்ளோம்.

எமக்கு எங்கு போவது எங்கு வருவது என்று தெரியவில்லை’ என்று கான் யூனிஸ் நகரில் இடம்பெயர்ந்த நிலையில் வசிக்கும் பாத்தி அல் நஜ்ஜார் என்பவர் ரோய்ட்டர்ஸுக்கு தெரிவித்தார்.

முன்னதாக தெற்கு காசாவின் ரபா நகரில் இஸ்ரேலிய படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறியே இஸ்ரேல் காசா மீது உக்கிர தாக்குதலை நடத்தி இருந்தது.

இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிராந்தியத்தின் மத்தியஸ்த நாடாக உள்ள கட்டார் போர் நிறுத்தம் தொடரும் என்று நம்பிக்கையை வெளியிட்டபோதும் காசாவில் இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் எதிர்பார்ப்பை இழந்துள்ளனர்.

‘நாம் நிம்மதிப் பெருமூச்சுடன் மீண்டும் எமது வாழ்வை கட்டியெழுப்ப முயலும்போது, குண்டுவீச்சுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன’ என்று அல் செட்டி அகதி முகாமில் உள்ள பாடசாலை ஒன்றில் தனது குழந்தைகளுடன் அடைக்கலம் பெற்றிருக்கும் 31 வயது தாயான கதிஜா அல் ஹுஸைனி குறிப்பிட்டுள்ளார்.

‘இது ஒரு குற்றமாகும் ஒன்று போர் நிறுத்தம் அல்லது போர் இருக்க வேண்டும், இரண்டும் இருக்க முடியாது.

குழந்தைகளுக்கு உறங்க முடியவில்லை, அவர்கள் போர் முடிந்து விட்டதாக நம்பி இருந்தனர்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்த உடன்படிக்கை அமுலுக்கு வந்தபோதும் அது தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 200இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா போர் நிறுத்தத்தின்படி ஹமாஸ் உயிருடன் இருந்த 20 பயணக்கைதிகளையும் இஸ்ரேலின் ஒப்படைத்தபோதும் 28 பணயக்கைதிகளின் உடல்களை கையளிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

சில உடல்களை கண்டுபிடிப்பது மற்றும் மீட்பது சிரமமாக உள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேலும் இரு பணயக்கைதிகளின் சடலங்களை கையளித்ததாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான இஸதீன் அல் கஸ்ஸாம் படை நேற்று தெரிவித்தது.

ஏற்கனவே ஹமாஸ் அமைப்பு 15 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ரோய்ட்டர்ஸ்

Related posts

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

editor

அதிகரிக்கும் கொரோனா – ஸ்பெயினில் மீண்டும் அவசரநிலை

இம்ரான் கான் இலங்கைக்கு