வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இன்று (30) மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகச் துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உட்பட மொத்தம் 9 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் செலுத்துனரை தவிர, துப்பாக்கிதாரியின் மனைவி, கெக்கிராவையில் மறைந்திருக்க உதவிய ஒருவர், பொரளை சஹஸ்புர பிரதேசத்தில் துப்பாக்கிதாரிக்கு உதவிய இருவர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, கொலைக்கு முன்னரும் பின்னரும் துப்பாக்கிதாரிக்கு போக்குவரத்து வசதி வழங்கிய காலி அகுலுகஹ பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுக்கு ஸ்டார்டர் மோட்டார் பொருத்தி பழுதுபார்த்துக் கொடுத்த வெலிகம வலானவில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் கொலையாளிகளுக்கு மோட்டார் சைக்கிளைக் கொண்டு வந்து கொடுத்த பொலத்துமோதரத்தைச் சேர்ந்த இளைஞன் ஆகியோரும் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் தொடர்பாக எந்தப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று நீதவான் நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் வினவினார்.
அதற்குப் பதிலளித்த அவர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேலதிக விபரங்களைப் பதிவு செய்ய இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலைச் சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரியும் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் காவலில் உள்ளனர்.
அவர்களை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அவர்கள் நேற்று (29) பிற்பகல் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
