உலகம்

காசாவில் சர்வதேச படைகளை அனுமதிக்க ஹமாஸ் இணக்கம்

காசாவில் ஐ.நா. அமைதிகாக்கும் படையை நிலைநிறுவத்துவதற்கு ஹமாஸ் இணங்குகின்றபோதும் ஆயுதக் களைவு தொடர்பில் ஏனைய பலஸ்தீன தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்த அமைப்பின் காசாவுக்கான தலைவர் கலில் அல் ஹய்யா தெரிவித்துள்ளார்.

அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஹய்யா, போர் நிறுத்தம் மற்றும் காசாவின் மீளக் கட்டியமைக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கு ஐ.நா படைகளை நிலைநிறுத்துவது தொடர்பில் பலஸ்தீனர் தரப்புகள் இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

எனினும் ஆயுதங்களை களைவது தொடர்பில் பேசிய அவர், ‘அது ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறிய தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தால் இந்த ஆயுதங்கள் நாட்டிற்கு கையளிக்கப்படும்’ என்றார்.

காசா போர் நிறுத்தத்தின் இரண்டாவது கட்டம் தொடர்பில் மத்தியஸ்தர்கள் தற்போது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் பின் 20 அம்ச திட்டத்தின் அடிப்படையில் எட்டப்பட்ட காசா போர் நிறுத்ததின் அடுத்த கட்டத்தில் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் தனது ஆயுதத்தை களைவதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது

‘அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்ட பின், அமைதி மற்றும் சகவாழ்வை உறுதி அளித்து தமது ஆயுதங்களை கைவிட விரும்பும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும்.

அந்த உறுப்பினர்கள் காசாவை விட்டு வெளியேற விரும்பினால் அவர்களை ஏற்கும் நாடுகளுக்கு பாதுகாப்பாகச் செல்ல அனுமதி அளிக்கப்படும்’ என்று இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் ஆயுதத்தை கைவிடாவிட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எச்சரித்து வருகிறது.

மறுபுறம் காசாவில் உள்ள ஹமாஸ் எதிர்ப்பு கும்பல்களுக்கு இஸ்ரேல் ஆயுதங்களை வழங்கி வருகிறது.

இந்த கும்பல்கள் காசாவில் உதவிகளை கொள்ளையிடும் வேலைகளிலும் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப் திட்டத்தின்படி காசா நிர்வாகம், தொழில்நுட்ட, அரசியலற்ற குழு ஒன்றிடம் கையளிக்கப்படுவதோடு, காசாவில் தினசரி செயற்பாடுகளை அந்தக் குழு மேற்கொள்ளும்.

இதில் ட்ரம்ப் மற்றும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் போன்ற சர்ச்சைக்குரியவர்களை கொண்ட சர்வதேச நிலைமாற்றக் குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

காசாவைச் சேர்ந்தவர்கள் காசா நிர்வாகத்தை ஏற்பதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ஹய்யா குறிப்பிட்டார்.

”தேசிய ஒற்றுமையை மீட்டெடுக்கும் ஆரம்பப் புள்ளியாக நாம் தேர்தலை நோக்கிச் செல்ல வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் நிலைநிறுத்தப்படும் சர்வதேச படை தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நிலவி வருகிறது.

இதில் யாரை அனுமதிப்பது என்பது தொடர்பில் தாமே தீர்மானிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அங்கு அமெரிக்க துருப்புகளை நிலைநிறுத்துவதை ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.

இதில் இந்தோனேசியா, ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, கட்டார், துருக்கி மற்றும் அசர்பைஜான் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அந்த நிர்வாகம் கூறியுள்ளது.

‘எமது பாதுகாப்பை நாம் கட்டுப்படுத்துவதோடு சர்வதேச படையை பொறுத்தவரை எந்தப் படையை ஏற்க முடியும் என்பதை நாமே தீர்மானிப்போம் என்பதை நாம் தெளிவாகக் கூறிக்கொள்கிறோம்.

நாம் இப்படித் தான் செயற்படுவோம், தொடர்ந்தும் எமது செயற்பாடு இப்படித் தான் இருக்கும்’ என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வான், தரை மற்றும் கடல் மார்க்கமான சரமாரித் தாக்குதல்களை நடத்தி அங்கு பேரழிவை ஏற்படுத்தி இருக்கும் இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் கணிசமான பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் காசாவில் கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னரும் அங்கு இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதோடு உதவிகள் முழுமையாக செல்வதையும் கட்டுப்படுத்தி வருகிறது.

காசாவில் குவிந்து கிடக்கும் இடிபாடுகளை அகற்றுவதற்கான கனரக இயந்திரங்கள் நுழைவதையும் இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருவதாக காசா நகர மேயர் யஹ்யா அல் சராஜ் தெரிவித்துள்ளார்.

காசா நகரில் இஸ்ரேலின் ஆயிரக்கணக்கான வெடிக்காத குண்டுகள் இருப்பதாகவும் அது உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

காசா நகருக்கு குறைந்தது 250 கனரக வாகனங்கள் மற்றும் அங்கு நீர் கட்டமைப்புகளை பராமரிப்பதற்கும் கிணறுகளை நிர்மாணிப்பதற்கும் 1000 தொன் சிமந்து தேவையாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு ஆண்டு போரில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு அங்கு இடிபாடுகளில் சிக்கிய நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களின் உடல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

எனினும் தற்போது காசாவில் உள்ள 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை மீட்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உடல்களை தேடும் பணிக்கும் கனரக உபகரணங்களுடன் எகிப்து மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு ஒன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காசாவில் உயிரிழந்த 15 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் கையளித்த நிலையிலேயே மேலும் 13 உடல்கள் அங்கு உள்ளன.

எனினும் இந்த உடல்களை கண்டுபிடிப்பது மற்றும் மீட்பதில் சிக்கல் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Related posts

இந்தியாவில் 1 மில்லியனை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

இங்கிலாந்தில் டிசம்பர் 2 வரை மீண்டும் முழு ஊரடங்கு

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி சரண்