தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 அடிப்படை சம்பளத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன.
நிச்சயமாக கேட்ட சம்பளத்தை விட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும்.
மிக விரைவில் இதை நாங்கள் பெற்று கொடுப்போம் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண தீபாவளி விழா நேற்றையதினம் (26) ஹபுகஸ்தென்ன வேவெல்கெட்டிய கீழ் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,
எதிர்வரும் நான்கு வருடத்திற்குள் மலைய மக்களுக்கு ஒரு பாரிய மாற்றத்தினை ஏற்படுத்திக் கொடுப்போம். இதை யாராலும் தடுக்க முடியாது.
போதைப்பொருளால் இன்று இலங்கையில்
எவ்வளவு பேர் பாதிக்கப் படுகின்றார்கள்.
குறிப்பாக போதைப்பொருளால் மலையக மக்களே கூடுதலாக பாதிக்கப்படுகின்றார்கள்.
இன்று பாடசாலை கல்வியை இடைநிறுத்திய மாணவர்கள் மற்றும் கல்வி அறிவு, போசாக்கு குறைந்த மாணகள் மலையாளத்திலேயே கூடுதலாக இருக்கின்றார்கள்.
அது மட்டுமல்ல தொழில் இல்லாத மக்கள் மற்றும் காணி உரிமை வீட்டு உரிமை இல்லாத மக்களும் கூடுதலானோர் மலையகத்திலேயே இருக்கின்றார்கள்.
போதைப்பொருளை அழிப்பதற்கு எமது அரசாங்கம் மிகவும் மும்முறமாக செயல்பட்டு வருகிறது. இதை எல்லாம் பற்றி யாரும் பேச மாட்டார்கள்.
கடந்த காலங்களில் மலையகப் பகுதிகளுக்கு போதைப் பொருளை கொண்டு வருவதற்கு மலையக அரசியல்வாதிகளும் காரணமாக இருந்தார்கள். இது உலகத்திற்கே தெரியும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு பல்வேறு திட்டங்களை செய்து வருகின்றோம்.
இதன் முதலாவது திட்டமானது மலையாக மக்களை தோட்ட மக்கள் என்றுதான் கடந்த காலங்களில் அழைக்கப்பட்டது.
இந்த சொல் எமது சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சொற்களாக இவ்வளவு காலமும் காணப்பட்டது.
அது மாத்திரமல்ல நாங்கள் தமிழர்கள் என்று ஒற்றுமையாக பேசி வந்தாலும் கடந்த காலங்களில் ஒரு சமூகத்தினர் மலையக மக்களை தோட்டம் மக்கள் என்று ஒதுக்கப்பட்ட சமூகம் என்று பார்த்தார்கள்.
எமது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால் எமது மலையகத் தோட்ட மக்களுக்கு சமூகத்திலே ஒரு அந்தஸ்தை வழங்கி உள்ளார்.
மக்களுடைய பார்வையிலே மாற்றங்கள் வரவேண்டும் என்பதற்காக வேண்டி 2025 ஆம் ஆண்டு முதலாவது பாராளுமன்ற வரவு செலவு திட்ட உரையிலேயே ஜனாதிபதி அவர்கள
மலையக தமிழ் மக்கள் என்ற ஒரு சொற்பதத்தை மலைய மக்களுக்கு வழங்கினார்.
இவ்வளவு காலமும் தோட்ட மக்கள் என்று குறிப்பிடப்பட்டது. தற்போது மலைக தமிழ் மக்கள் என்று அது மாற்றப்பட்டு மக்களுக்கு ஒரு கௌரவத்தையும் அந்தஸ்தையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கி உள்ளார். இதுதான் மாற்றம் இதுதான் எமக்குத் தேவை.
மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கம் 2017 ஆம் ஆண்டு 10 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு முன் வந்தது.
2017 ஆம் ஆண்டு முதல் அந்தக் காலப்பகுதியில் ஆட்சிகள் இருந்த அரசாங்கம் கடந்த 8 வருட காலத்தில் 1300 வீடுகளுக்கு அடிக்கல் நடப்பட்டு அதில் 25 வீடுகளை மட்டுமே முழுமையாக அமைத்துள்ளது.
அடுத்த வருட இறுதிக்குள் இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் மலையக மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்.
ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக செய்து தருமாறு ஐயப்ப பக்த அடியார்கள் என்னிடம் கோரிக்கையை முன் வைத்தார்கள்.
இந்தக் கோரிக்கையை ஏற்று நான் ஜனாதிபதி மற்றும் மத விவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கமைய இன்று அது புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று உலகத்திலேயே ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாகிய ஒரே நாடு இலங்கை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மத விவகார மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் ஈ.கே.ஏ.சுனீதா, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பிரிவு பணிப்பாளர் நெவில் குமாரகே மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்
