வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த செயற்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கும் நோக்கில், உயர் மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (16) கடற்றொழில் அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பானது, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.
இதில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொன்த, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிநிதிகள், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர், கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளுக்குப் பொறுப்பான தளபதிகள் (இணையவழி ஊடாக) மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில், இலங்கை கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது, புல்மோட்டை, கொக்கிளாய், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி மேற்கு போன்ற பகுதிகளை இலக்கு வைத்து, ஒரு சிறு குழுவினரால் மேற்கொள்ளப்படும் டைனமைட் பாவனை, தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மற்றும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் போன்ற சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான உபாயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதே நேரம் அந்தந்த மாவட்டங்களின் உதவிப் பணிப்பாளர்கள் தமது பிரதேசங்களில் நிலவும் கள நிலைவரங்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்: “சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு சிறு குழுவினரால், ஆயிரக்கணக்கான சட்டபூர்வமான மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த, கடற்படை, பொலிஸ் மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஒன்றிணைந்து, அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த வீதிச் சோதனைகளையும் விசேட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
அதற்கு இணையாக, சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவான விழிப்புணர்வு வழங்கப்படும்.
எமது நோக்கம் தண்டிப்பது மட்டுமல்ல, சட்டபூர்வமான மீனவ சமூகத்தைப் பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதாகும்.” என தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொன்த அவர்கள், “இது தேசிய பாதுகாப்புடனும் தொடர்புடைய ஒரு பாரதூரமான பிரச்சினையாகும்.
கடற்படை, பொலிஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்புடன் இந்தச் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு அமைச்சின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்,” என உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலின் போது, உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலை இழுத்தல் தொடர்பாக முன்னர் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் கரைவலை இழுப்பதற்காக உழவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதை முற்றாகத் தடைசெய்யும் தீர்மானத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்த இங்கு மீண்டும் இணக்கம் காணப்பட்டது.
அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரின் தலைமையில் முன்னர் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது இத்தீர்மானம் எட்டப்பட்டதுடன், போதுமான சலுகைக் காலம் வழங்கப்பட்டு, அது குறித்து அனைத்து கரைவலை உரிமையாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு நினைவுகூரப்பட்டது.