அரசியல்உள்நாடு

2019, 2024 இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் மக்கள் ஏமாந்தனர் – 2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது – சஜித் பிரேமதாச

மக்களின் துயரங்கள், கண்ணீர், வலிகள் மற்றும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் பலமானதொரு அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ வேண்டும்.

அண்மையில் நடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாட்டின் 220 இலட்சம் மக்களும் ஏமாந்தனர். 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு நாடு வங்குரோந்தடைந்தது.

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது சமூகமயப்படுத்தப்பட்ட பொய்கள் மற்றும் ஏமாற்று பேச்சுக்களால் நாட்டு மக்கள் ஏமாறும் நிலைக்கு இன்று வந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேற்று (15) மாத்தளை நகரில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன, முன்னாள் பாராளு­மன்ற உறுப்­பினர்  ரஞ்சித் அலு­வி­கார உள்ளிட்ட மாவட்ட மட்ட பல அரசியல் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2028 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொள்ளப் போகும் சவால்கள் தொடர்பில் நல்ல புரிதலை கொண்டிருக்க வேண்டும். 2028 ஆம் ஆண்டளவில், ஆண்டுதோறும் 5 பில்லியன் டொலர் கடனை நாம் திருப்பிச் செலுத்த வேண்டி காணப்படுகின்றன.

கடனைத் திருப்பிச் செலுத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வேகப்படுத்த வேண்டும். தொழிற்துறை, விவசாயம், சுற்றுலா மற்றும் சேவைத்துறைகள் உட்பட சகல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.

பொருளாதார முன்னேற்றத்தை வேகப்படுத்தினால் மாத்திரமே
2028 முதல் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். பெற வேண்டிய வெளிநாட்டு நேரடி முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பெறப்பட்டு வருகின்றன.

பொருளாதாரம் வளர்ச்சி வேகம் முன்னேற்றம் காணாதவிடத்து, எம்மால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் அபாயம் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

IMF ஒப்பந்தம் குறித்து முந்தைய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய பொருளாதார ஆலோசகர்களின் கருத்துப்படி, இவ்வாறு போகும் போக்கில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என்று கூறுகின்றனர்.

இன்று இவ்வாறு கூறும் இதே பொருளாதார ஆலோசகர்களே 2033 ஆம் ஆண்டிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் வேண்டியிருந்த சமயத்தில், இல்லை 2028 ஆம் ஆண்டு முதலே கடனைத் திருப்பிச் செலுத்துகிறோம் எனக் கூறி முடிவை எடுத்தனர்.

எமது நாட்டின் பொருளாதார நிதியல் தொடர்பான பரந்த ஆய்வை மேற்கொண்டு, எமது நாட்டின் நிதியியல் இயலுமையைக் கருத்திற் கொண்டே 2033 ஆம் ஆண்டில் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்தது.

இந்த இணக்கத்தை மாற்றி, 2028 ஆம் ஆண்டு முதலே கடனைத் திருப்பிச் செலுத்த முடிவை எடுத்த பொருளாதார ஆலோசகர்களே இன்று இவ்வாறு வியாக்கியானங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால் நாடும் நாட்டு மக்களுக்குமே பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

தற்போதைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கம் பயணித்தது போலவே பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி பதவியையும், 159 பெரும்பான்மையையும், உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையையும் கொண்ட இந்த அரசாங்கம், முந்தைய அரசாங்கத்தின் அதே இணக்கப்பாட்டையே இன்னும் பின்பற்றி வருகின்றது.

இதனை மாற்றியமைத்து, எமது நிதியியல் இயலுமைகளுக்கு ஏற்ப திருத்தங்களை மேற்கொள்ளுமாறே நாம் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறோம்.

எம்மால் மீண்டுமொரு வங்குரோத்து நிலையை சந்திக்க முடியாது. முகம் கொடுக்கவும் முடியாது. நேர்மையாகவே நாம் இந்த கருத்துக்களை முன்வைத்து வருகிறோம்.

அரசாங்கம் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். முந்தைய அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டாம் என்றே சொல்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், வங்குரோத்தடைந்த நாடு எனும் நாமமே நாட்டுக்கு கிட்டும்.

2033 ஆம் ஆண்டு முதல் கடனைத் திருப்பிச் செலுத்தினால் போதும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறினாலும், 2028 ஆம் ஆண்டு கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நாமாகவே இணக்கம் தெரிவித்துள்ளோம்.

எனவே, வரும் மூன்று ஆண்டுகளில் நாம் விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். அந்நிய செலாவணி கையிருப்பைப் பேணி வர வேண்டும். என்றாலும், இந்த அரசாங்கம் ஏமாற்று மற்றும் பொய்களையே சொல்லி வருகின்றது.

ஏமாற்று நடவடிக்கைகளால் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள முடியாது. நடைமுறை ரீதியான பொருளாதார செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அரசியல் வேறு, நாட்டு விவகாரம் என்பது வேறு.

நாட்டை கருத்திற் கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்யான பேச்சுக்களை வைத்து அரசியல் அதிகாரத்தை தக்க வைக்க முயற்சித்தால் அது தற்காலிகமானது என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

அரசியல் யாப்பு தயாரிக்கும் நடவடிக்கை குழு நாளை கூடுகிறது

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒத்துழைப்பு

editor

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை – திகதியை அறிவித்தார் சபாநாயகர்

editor