உள்நாடுபிராந்தியம்

மூதூர் சந்தையில் சுகாதார சீர்கேடுகள் – சுகாதார அதிகாரிகளின் கடும் எச்சரிக்கை

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தில் பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சந்தை பகுதியில் சுகாதார நெறிமுறைகள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, இன்று (12) ஞாயிற்றுக்கிழமை மூதூர் சுகாதார வைத்திய பணிமனை அதிகாரி வைத்தியர் நூர் முகம்மது கஸ்சாலி அவர்களின் தலைமையில் சுகாதார அதிகாரிகள் சந்தை வளாகத்துக்கு விஜயம் செய்து பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

பரிசோதனையின் போது அதிகாரிகள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை கண்டறிந்தனர்.

இந்த சந்தை பகுதி மூதூர் பிரதேச சபைக்கு சொந்தமானது. இந்நிலையை உடனடியாக சரிசெய்ய மூதூர் பிரதேச சபைக்கு எழுத்து மூலமான மனுவை சமர்ப்பிக்க உள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மேலும், இரண்டு வாரங்களுக்குள் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சந்தை நடைபெறுவதை நிறுத்தும் வகையில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

பரிசோதனையின் போது அதிகாரிகள் முன்வைத்த குற்றங்கள்

1.உணவுப் பொருட்கள் தரையில் விற்பனை

பல வியாபாரிகள் உணவுப் பொருட்களை (மரக்கறி உள்ளிட்டவை) உயரமான மேசைகள் அல்லது தட்டுகளில் வைக்காமல், தரையில் விரிப்புகளைப் பரப்பி அதன் மேல் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தூசி, ஈக்கள் மற்றும் கிருமித் தொற்றுகள் எளிதில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது சுகாதார நெறிமுறைகளை மீறும் செயற்பாடாக அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, சில வியாபாரிகள் தரையில் வைத்து விற்பனை செய்யக்கூடாத பொருட்களை அப்படியே தரையில் வைத்து விற்பனை செய்கின்றனர்; அதேவேளை, உயரமான இடத்தில் விற்பனை செய்ய வேண்டிய பொருட்களை தரையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.இப்படியான செயல் சுகாதார விதிகளுக்கு முரணாகும்.

2.கட்டாக்காலி மாடுகளின் நடவடிக்கை

சந்தை வளாகம் முழுவதும் திறந்த நிலையில் காணப்படுவதால், மாடுகள் மற்றும் காளைகள் சுதந்திரமாக நுழைந்து மலம் மற்றும் சிறுநீர் செலுத்துகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சில வியாபாரிகள் இதனைப் பொருட்படுத்தாமல், அத்தகைய இடங்களிலும் விரிப்புகளை விரித்து மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

3.மழைக்காலங்களில் சேறாக மாறும் சந்தை

மழைக்காலங்களில் சந்தை முழுவதும் சேற்றில் மூழ்கியதாக காணப்படுகின்றது. வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சில வியாபாரிகள் இதனைப் பொருட்படுத்தாமல், அத்தகைய இடங்களிலும் விரிப்புகளை விரித்து மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

4.குப்பை மேலாண்மை குறைபாடு

விற்பனைக்குப் பிறகு மீதமுள்ள காய்கறி, பழம் போன்ற கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படாமல், அங்கங்கே குவிந்து காணப்படுகின்றன. இதனால் அப்பகுதி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

“IMF பணம் கிடைக்கும் திகதியில் இன்னும் நிச்சயமில்லை”

சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகள்

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று அதிகரிக்கப்பட மாட்டாது!