அரசியல்உள்நாடு

இலங்கை – ரஷ்ய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை – ரஷ்ய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கௌரவ அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, கௌரவ அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (08) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

ரஷ்யாவின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ லெவன் எஸ். செகேரியன் கௌரவ அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் மற்றும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளர் எம். ஜயலத் பெரேராவும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் போது, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கல்வி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கலாசாரப் பரிமாற்றம் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாடு தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டன.

மீள ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் பாராளுமன்ற இராஜதந்திரத்தை அதிகரிப்பதற்கும் இரு நாடுகளுக்கிடையில் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதற்கும் ஒரு பயனுள்ள தளமாகச் செயற்படும் என்று இரு தரப்பினரும் இதன்போது நம்பிக்கை வெளியிட்டனர்.

பாராளுமன்றத்திற்கான தனது விஜயத்தின் போது ரஷ்ய தூதுவர் கௌரவ லெவன் எஸ். செகேரியன் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்னவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இதன்போது இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

Related posts

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி – ஜனாதிபதி அநுர

editor

மின் கட்டணத்தை 75% அதிகரிக்க அனுமதி

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

editor