சுற்றாடல் அமைச்சு மற்றும், “Clean Sri Lanka” வேலைத்திட்டம் இணைந்து செயற்படுத்தும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டத்தின் மற்றுமொரு துரித செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, தப்போவ குளத்தை மையமாக கொண்டு நேற்று (10) ஆரம்பமானது.
இலங்கை எதிர்கொள்ளும் ஒரு பாரிய பிரச்சினையான மனித-யானை மோதலுக்கு நிலையான தீர்வை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அந்த நோக்கத்திற்காக “யானை வேலிக்கு அப்பால் ஒரு நிலையான தீர்வு” என்ற கருப்பொருளின் கீழ் இது ஒரு தேசிய வேலைத் திட்டமாக ஆரம்பிக்கப்படுகிறது.
யானைகளுக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் யானைகள் பாதுகாப்பு வலயங்களை நிறுவுதல் ஆகியவை இந்த தேசிய வேலைத்திட்டத்தின் முக்கிய பணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப கட்டமாக, தப்போவ குளத்தில் பரவியிருந்த ஆக்கிரமிப்புத் தாவரங்கள் அகற்றப்பட்டன.
முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் பிரதேச இளைஞர்கள், சுற்றாடல் முன்னோடி அணியினர், பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேர் இந்த சிரமதான நடவடிக்கையில் பங்களித்தனர்.
இத்திட்டத்தின் கீழ், வனஜீவராசிகள் பாதுகாப்பு வனங்களில் குளங்களைப் புனரமைக்கவும், கிராமியக் குழுக்களின் ஊடாக பிரதேச செயலக மட்டத்தில் பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறையை வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்துடன் இணைந்ததாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தலைமையில் தப்போவ குளத்தின் எல்லைகள் குறித்தல், வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான கல்வல சூழலியல் பூங்காவில் ஆக்கிரமிப்புச் செடிகள் அகற்றப்பட்டு, அதே பூங்காவில் சமூக மைய அபிவிருத்தி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
மேலும், எதிர்வரும் நாட்களில் வனாத்தவில்லுவ பிரதேசத்தில் உள்ள எலாரிஸ் குளம் மற்றும் அனாத்த குளம் புனரமைக்கப்படவுள்ளதுடன் கருவலகஸ்வெவ மின்கம்பியின் இருபுறமும் உள்ள காடுகளை அகற்றி வனாத்தவில்லுவ மின்கம்பிக்கு அருகில் உள்ள வீதியும் சீரமைக்கப்படும்.
சுற்றாடல் அமைச்சும் “Clean Sri Lanka” வேலைத்த்திட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்விற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்திய தம்மிக்க படபெந்தி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, சுற்றாடல் பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், “Clean Sri Lanka” செயலக பணிப்பாளர்களான கபில செனரத் (சமூக) அஞ்சுல பிரேமரத்ன (சுற்றாடல்), இசுரு அனுராத (தகவல் தொழில்நுட்பம்), புத்தளம் மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.