போதைப்பொருட்களிலிருந்து தமது சகோதர சகோதரிகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை பாடசாலையிலிருந்தே ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது என பாராளுமன்றத்தின் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் 2025.10.03 ஆம் திகதி நடைபெற்ற அனுராதபுரம் மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் உரையாற்றும் போதே கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச மட்டத்தில் மாணவர் பாராளுமன்றங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை விளக்கிக் கூறிய கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர், இந்த நாட்டின் மாணவர் பாராளுமன்றங்கள் மூலம் தங்கள் பாடசாலைக்கு மாத்திரமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும் மாற்றங்களைச் செய்வதற்குத் தேவையான யோசனைகளை முன்வைக்க வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, போதைப்பொருட்களிலிருந்து தமது சகோதர சகோதரிகளைப் பாதுகாப்பதற்கு மாணவர் பாராளுமன்றங்கள் மூலம் புதிய திட்டங்கள் மற்றும் கருத்துக்களைச் செயற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஏற்படும் நன்மைகளை அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், தலைவர் என்பவர் அதிகாரத்தை அனுபவிக்கும் நபர் அல்ல, மாறாக தமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்பவரே என்று அவர் குறிப்பிட்டார்.
அதிகாரம் ஒரு ஆபரணம் அல்ல என்றும், அதிக எண்ணிக்கையிலான மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவியே என்றும் அவர் வலியுறுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த, ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார அவர்கள், சமூகத்தில் போதைப்பொருள் ஏற்படுத்தும் அழிவைக் சுட்டிக்காட்டியதுடன், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாகாமல் இருப்பதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும், அதனை எதிர்ப்பதற்குத் தேவையான ஆளுமையை மாணவர்களிடம் உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பமாகியதுடன் இதன்போது சபாநாயகர் மற்றும் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். பின்னர், ஒவ்வோர் அமைச்சரும் தமது அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயற்படுத்த எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் அடங்கிய யோசனைகளை சபையில் சமர்ப்பித்தனர்.
அத்துடன், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட கௌரவ விருந்தினர்களால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி செயலகமும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் தொடரின் இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரொஷான் கமகே, ஜனாதிபதி மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க, ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார, ஜனாதிபதி அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல ஆகியோரும், அனுராதபுரம் மத்திய கல்லூரியின் அதிபர் பேர்சி மஹநாம ஜயசுந்தர மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.