கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீக பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்காக விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்கக் கோரிய பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி இன்று (07) பாராளுமன்றத்தில் வைத்து சபாநாயகரிடம் கையளித்தது.
கௌரவ சனாதிபதி வழங்கிய வழிகாட்டுதலின்படி திறைசேரி செயலாளரால் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, குறித்த குழு தனது அறிக்கையில் தொடர்புடைய விடயம் குறித்து தனது அவதானிப்பை முன்வைத்து கொள்கலன்கள் விடுவித்த முறை சட்டத்திற்கு மாறானது என்றும், “முறையான பரிசோதனை இல்லாமல் கொள்கலன்கள் விடுவிப்பது தேசிய பாதுகாப்பு, வருமான சேகரிப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு விடயங்களில் கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது” என்று அவதானிக்ககப்பட்டுள்ளதாலும்;
இலங்கை சுங்க அதிகாரிகள் சங்கம் குறித்த கொள்கலன்கள் விடுவிப்பின் போதான முறைகேட்டின் தன்மையைக் கருத்தில் கொண்டு குறித்த கொள்கலன்களின் உள்ளடக்கம் குறித்து தனக்கு பொறுப்பேற்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்துள்ளதாலும்.
குறித்த கொள்கலன்கள் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பாராளுமன்றத்தில் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளால் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாலும்.
சந்தேகத்திற்குரிய நிலைமைகள் மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுடன் நேரடியாக தொடர்பு கொள்கின்றன என்ற நியாயமான அச்சம் மேலும் தீவிரமாகியுள்ளதாலும்.
இந்த விடயம் தேசிய பாதுகாப்பு, சட்ட அமுலாக்கம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாட்டின் துறைமுக மற்றும் சுங்க நிர்வாகத்தின் ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மை ஆகிய விடயங்களுடன் தொடர்புடையது என்பதுடன் இவையெல்லாம் அதிகமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுமாகும் என்பதாலும் விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு இதன்மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டன.
இப்பிரேரணையை கையளிக்கும் நிகழ்வில், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க, எதிர்க்கட்சியின் பிரதி கொறடா ஜே.சி. அலவத்துவல, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, டி.வி.சானக, காவிந்த ஜயவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.