உள்நாடுபிராந்தியம்

முத்து நகர் விவசாய காணி அபகரிப்பு – பிரதியமைச்சர் இரட்டை வேடம் – மிப்லான் மௌலவி குற்றச்சாட்டு

திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் காணி அபகரிப்புக்குட்பட்டதையடுத்து, இப்பகுதியின் பிரதியமைச்சர் இரட்டை வேடம் போட்டு வருவதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லான் மௌலவி குற்றம்சாட்டியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முத்து நகர் விவசாயிகளின் காணி மீட்புக்கான சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (06) 20ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இப்போராட்டக்காரர்களுடன் சந்திப்பினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மிப்லான் மௌலவி,

“இங்குள்ள பிரதியமைச்சர் அரசாங்கம் பக்கம் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, மக்களின் பக்கம் இருக்கும் போது வேறு ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போட்டு வருகிறார்,”
எனக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“திருகோணமலை மாவட்ட முஸ்லீம்கள் தற்போது அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

புல்மோட்டை தொடக்கம் குச்சவெளி மீனவர் பிரச்சினை, நில உரிமை விவகாரம் என தொடங்கிய போராட்டம் இப்போது முத்து நகர் வரை சென்றுள்ளது.

கடந்த கால அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகள் அளித்து முஸ்லிம் மக்களின் வாக்குகளை பயன்படுத்தி விட்டனர்.

தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முஸ்லிம் சமூகமே ஆதரவளித்தது. எனவே ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு முத்து நகர் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும்.”

“ஊழல், இனவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட விடயங்களில் செயல்படும் அரசாங்கம், முத்து நகர் விவசாயிகளுக்கும் நியாயம் வழங்க வேண்டும்.

கிழக்கு மாகாண சிவில் சமூகம், உலமாக்கள், பள்ளிவாசல்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

எதிர்வரும் ஜூம் ஆ தொழுகையின் பின்னர் அனைத்து பள்ளிவாசல்களும் இணைந்து உலமா சபை வழியாக மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

மேலும் சுமார் 10 ஆயிரம் கையொப்பங்களை சேகரித்து ஜனாதிபதியிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இதற்கிடையில், முத்து நகர் ஒன்றிணைந்த விவசாயச் சம்மேளத்தின் செயலாளர் சஹீலா சபூர்தீன் கூறுகையில்,

“இருபதாவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் எங்கள் விவசாய பூமியை மீட்டுத் தரக் கோரி போராடி வருகிறோம்.

பிரதமர் கூறிய பத்து நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேறவில்லை.

இம் மாதம் 20ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. நெற்செய்கைக்கான காலம் நெருங்கி வருவதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். எனவே எங்கள் விவசாய நிலங்களை மீளப் பெற்றுத் தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

இன்று 200 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

editor

இன்றும் 2 கொரோனா மரணங்கள்

ரஹ்மத்துடைய ரமழானில் இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்