உலகம்

காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டொனால்ட் டிரம்ப் உத்தரவு

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.

இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கை தோன்றியுள்ளதாகக் கூறி, டிரம்ப் இஸ்ரேலுக்கு காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

இதன் பின் ஹமாஸ் இதில் விரைந்து முடிவெடுக்க வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு விதித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசித்து வந்த ஹமாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்த கைதிகளின் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் காசா பகுதியை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உடனடி உதவி வழங்குவதற்கும், அரபு, இஸ்லாமிய நாடுகள் மற்றும் டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும் திட்டத்தின் பிற விபரங்களை விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது.

டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தில் உடனடி போர்நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல், ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியலில் இருந்து வெளியேறுவது மற்றும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

ஆயுதத்தை கைவிடுவது உள்ளிட்ட அம்சங்களை ஹமாஸ் ஏற்க தயங்குவதாக கூறப்படுகிறது.

Related posts

கொரோனா தொற்றால் பிரித்தானியாவில் இதுவரை 165,221 பேர் பாதிப்பு

மற்றுமொரு கொடிய நோய் குறித்து WHO எச்சரிக்கை

பாகிஸ்தான் சொகுசு விடுதியில் குண்டுத்தாக்குதல்