இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு எதிர்வரும் 08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுஷ நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இஸ்ரேலுக்கு விவசாய வேலைகளுக்காக ஊழியர்களை அனுப்பும் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைகள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நீதிமன்றில் முன்பிணை மனு தாக்கல் செய்தார்.
இந்த முன்பிணை மனு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போத்தரகம முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (03) அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், மனுஷ நாணயக்காரவின் முன்பிணை மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதனையடுத்து மனுஷ நாணயக்கார சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி , இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கைக்கு விரைவில் பதில் அளிக்குமாறு நீதவானிடம் தெரிவித்தார்.