உள்நாடு

ஒரு பால் திருமண விவகாரம் – எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாக கண்டிக்கிறது

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அண்மையில் எமது நாட்டில் ஒரு பால் திருமண சுற்றுலா பயணிகளுக்கான சட்ட அங்கீகாரத்தை ஊக்குவிப்பதற்காக சில முன் ஏற்பாடுகளை செய்துள்ளது.

பொருளாதார இலக்கை அடைதல் என்ற நோக்கோடு எமது நாட்டின் மத நம்பிக்கைகள், ஒழுக்க மாண்புகள், கலாசார பாரம்பரியங்கள் போன்ற விடயங்களுக்கு முரணாக இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது ஏற்புடையதல்ல.

அதே நேரம் எமது நாட்டின் எல்லா சமயங்களும் மனித மாண்புகள் மற்றும் குடும்ப வாழ்வு என்பன ஆண், பெண் என்ற இயற்கை பந்தத்தின் அடியாகவே உருவாகின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இத்தகைய அறநெறிகளை சீர்குலைப்பதானது குடும்ப, சமூக மற்றும் மனிதாபிமான விழுமியங்களை புறந்தள்ளி விடுகின்றன.

சுற்றுலாத் துறைக்காக வேண்டி இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதானது மிகப்பெரிய சுகாதார சீர்கேடுகளையும், எயிட்ஸ் போன்ற ஆட்கொல்லி நோய்களையும் பரப்ப வல்லது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அத்தோடு பொருளாதார அபிலாஷைகளுக்கு அப்பால் இது மனித வாழ்வுக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்து, பொருளாதார வளத்தோடு எந்த நல்வாழ்வு நோக்கமாக கொள்ளப்படுகிறதோ அந்த நோக்கமே தவிடு பொடியாகி விடும் என்பதும் கவனிக்கத்தக்கது.

அது மட்டுமல்லாது, எமது நாட்டின் கலாசார அடையாளத்தையும் எதிர்கால சந்ததியினரையும் இது பாதிக்கும்.

மானிட உருவாக்கமும் இன விருத்தியும் இயற்கையான ஆண், பெண் இணைப்பின் அடியாகவே எழுந்துள்ளன என்பது ஆதாரபூர்வமானது.

இந்த இயற்கை சமநிலையை சீர்குலைப்பது குடும்ப வாழ்வை மட்டுமல்லாது சமூகக் கட்டமைப்பையும் மனித நாகரீகத்தின் வலைப் பின்னலையும் நிர்மூலமாக்கிவிடும்.

இறைவனின் படைப்புகளாகிய ஐந்தறிவு கொண்ட மிருகங்கள், பறவைகள் கூட செய்யாத ஓர் ஈனச்செயலாக இது இருக்கிறது.

ஏனைய சமயங்களை போல இஸ்லாமும் இத்தகைய இயற்கைக்கு மாற்றமான செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறது.

இலங்கையானது வளமானதும் கலாசார, சமயப் பாரம்பரியங்கள் நிறைந்த குடும்பம், ஒழுக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம் போன்றவைற்றை கொண்ட பாக்கியமான பூமியாகும்.

எனவே, இந்த தீங்கு விளைவிக்க கூடிய விடயத்தை மீளப் பெற்று அதற்கு மாற்றீடாக பாரம்பரியம், ஆன்மீகம், இயற்கை அழகு மற்றும் விருந்தோம்பல் போன்ற விடயங்களைக் கொண்டு எமது நாட்டை வளப்படுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை மிகவும் வினயமாக கேட்டு கொள்கிறோம்.

முஃப்தி எம்,ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

Related posts

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் 15 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்!

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு

வெள்ளவத்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி