அரசியல்உள்நாடுபிராந்தியம்

சப்ரகமுவ மாகாணத்தில் ஆரோக்கிய நலன்புரி நிலையம் ஆரம்பம்!

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘சுகமான நாடு திட்டத்தின் கீழ், ஆரோக்ய நலன்புரி நிறுவுவதற்கான சப்ரகமுவ மாகாண ஆரம்ப நிகழ்வு நேற்றையதினம் (27)
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

நாடு முழுவதும் இவ்வாறான ஆயிரம் நிலையங்களை நிறுவ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் முதலாவது நிலையம் தென் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

சப்ரகமுவ மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள முதலாவது நிலையம் இதுவாகும்.

இரண்டாயிரத்து ஐந்நூறு முதல் பத்தாயிரம் வரை மக்கள் தொகை கொண்ட பிரதேசத்திற்கு ஒரு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இதன் பிரதான நோக்கம் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதே ஆகும்.

அதன்படி, இந்த நிலையங்கள் மூலம் புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உட்பட தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மேற்கொள்ளப்படும்.

அத்துடன் பிரதேசத்தின் சனத்தொகை தொடர்பான தரவுத் தொகுதியொன்றைப் பெறுவதும் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு ஆரம்ப சிகிச்சைகளை வழங்குதல், தேவைப்பட்டால் இரண்டாம் நிலை சிகிச்சைக்கான வசதிகள் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைத்தல் என்பன இந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிரதான மருத்துவமனைகளில் நிலவும் அதிக சனநெரிசலைக் குறைத்தல் என்பன இதன் மூலம் இடம்பெறும்.

இந்த நிலையத்திற்கான ஊழியர் குழாமில் ஒரு வைத்தியர், ஒரு தாதிய உத்தியோகத்தர், ஒரு பொதுச் சுகாதார பரிசோதகர், ஒரு குடும்ப சுகாதார சேவையாளர் ஆகியோர் அடங்குவர்.

மேற்படி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையத்திற்கு ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்,
அத்துடன் வாரத்திற்கு ஒரு முறை வைத்தியர் ஒருவர் கலந்துகொள்வார்.

இதன்போது உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ,

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டமானது எதிர்கால நிலைமையைக் கருத்தில் கொண்டு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதாரத்திற்காக ஆண்டுதோறும் அறுபதாயிரம் கோடி ரூபா செலவிடப்படும் தாகவும், மருந்துகளுக்காக மட்டும் 20,000 கோடி ரூபா செலவிடப்படுகின்றது

இந்த நலன்புரி நிலையங்களை மையமாகக் கொண்டு ஆயுர்வேத மருத்துவ முறைகள், யோகா பயிற்சிகள், சமூக சேவைப் பணிகள் உட்பட மேலும் பல வசதிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளபப்படும்.

தொற்றுநோய்கள், தாய்-சேய் மரணங்கள், பொதுச் சுகாதார சேவைகள் போன்ற துறைகளில் இலங்கை பல உயரிய சாதனைகளைப் பெற்றுள்ளதாகக் கூறிய அமைச்சர், தற்போது ஒரு சவாலாக இருக்கும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த இந்த நலன்புரி நிலையங்கள் மூலம் தீர்வு கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பத்மகுமார, வசந்த புஷ்பகுமார, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் புஷ்பகுமார திஸாநாயக்க, இரத்தினபுரி நகர பிதா இந்திரஜித் கடுகம்பல, சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனிதா, சப்ரகமுவ சுகாதார அமைச்சின் செயலாளர் சுஜீவா போதிமான்ன, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, இரத்தினபுரி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனோஜ் ருத்ரிகோ ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

editor

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!