உலகம்

விஜயின் அரசியல் கூட்டத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நேற்று (27) கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 5 சிறுவர்களும், 5 சிறுமிகளும், 17 பெண்களும், 12 ஆண்களும் அடங்குகின்றனர்.

அதேநேரம் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 21 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, உடற்கூராய்வு நிறைவடைந்த சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கரூரில் இருந்து நேற்றைய தினம் விமானம் மூலம் உடனடியாக விஜய் சென்னைக்கு திரும்பினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது எவ்வித பதிலையும் வழங்காமல் சென்றிருந்தார்.

இதனை அடுத்து சென்னை சென்ற அவர் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளதாவது,

தாங்க முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன், தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

இத்தாலி பிரதமர் பதவி இராஜினாமா

தாக்குதலுக்கு மத்தியில், ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Shafnee Ahamed

சீனாவில் புதிய மருத்துவமனை இன்று திறந்து வைப்பு [PHOTO]