உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் காட்டு யானைகளின் தொல்லை – உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்பதுடன், மக்கள் தங்கள் உயிர் மற்றும் சொத்துகளை பாதுகாக்க அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை (27) அதிகாலை 2.00 மணியளவில் சம்மாந்துறை உடங்கா 02 பகுதியில் காட்டு யானை ஒன்று வீட்டு மதில்களையும், கடை ஒன்றினையும், பயன் தரும் வாழை மற்றும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

இதனால் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் வாழும் பொது மக்கள் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் தொல்லையால் அச்சமடைந்துள்ளார்கள்.

இது தொடர்பாக, சம்மாந்துறை செந்நெல் கிராமம் 01, செந்நெல் கிராமம் 02 உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவுநேரங்களில் காட்டு யானைகள் உட்புகுந்து வீட்டுத் தோட்டங்கள், வீட்டு மதில்கள், கடை அறைகள் போன்றவற்றை சேதப்படுத்திய சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

மேலும், தினமும் இரவு வேளையில் காட்டு யானைகள் நடமாடிக்கொண்டிருப்பதாலும், பொது மக்களையும், பயன் தரும் பயிர் மற்றும் மரங்களையும் தாக்கி சேதப்படுத்திக்கொண்டிருப்பதனால் இரவு வேளைகளில் வெளியே செல்ல அச்சமடைந்துள்ளார்கள்.

அத்துடன், பொதுமக்களின் பாதுகாப்பு, பாடசாலை மற்றும் மத்ரஸா செல்லும் மாணவர்களின் நிலை என்பன பெரும் கவலைக்குள்ளாகி இருப்பதாகவும், காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தி விரைவில் நிரந்தர தீர்வு காண வனஜீவராசி பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில், சம்மாந்துறை பகுதியில் பல இடங்களில் காட்டு யானைகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு வேலி போன்ற தடுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொது மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

தகுதிவாய்ந்த பட்டதாரிகள் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது

editor

பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படும் தென்கிழக்கு பல்கலைக்கழகம்!