கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள அசல் வழக்கு கோப்பை அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (26) அதன் பதிவாளருக்கு உத்தரவிட்டது.
வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது வழக்கின் பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பிரதிவாதி நாமல் ராஜபக்ஷ சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், பிரதிவாதி கோரிய சில ஆவணங்கள் இன்னும் முறைப்பாட்டு தரப்பால் தமக்கு வழங்கப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நியாயமான விசாரணைக்கு இந்த ஆவணங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.
இதற்கு பதிலளித்த முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, பிரதிவாதி கோரிய பெரும்பாலான ஆவணங்கள் ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதுவரை பெறப்படவில்லை என பிரதிவாதியால் கூறப்படும் ஆவணங்கள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வினவி, வழங்கக்கூடிய ஆவணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதன்போது பிரதிவாதி கோரிய ஆவணங்களை அடுத்த வழக்கு விசாரணைக்கு முன்னதாக அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
பின்னர் நீதிபதி வழக்கை, முன் வழக்கு விசாரணை நடவடிக்கைக்காக டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் அசல் வழக்கு கோப்பு இன்னும் தனது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அதனை உடனடியாக தனது நீதிமன்றத்திற்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறும் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
இலங்கையில் ரக்பியை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்று பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக குற்றம்சாட்டி சட்டமா அதிபரால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.