தென்னிலங்கை அரசு மாபியாக்களின் களஞ்சியங்களை அரசு உடனடியாக சோதனையிட வேண்டும் என வவுனிய நெல் ஆலை உரிமையாளர் சங்கத்தலைவர் சி.விவேகானந்தராஜா தெரிவித்தார்.
இன்று வெளிக்குளத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
எமது புதிய அரசாங்கமானது கூறியதை செய்யவில்லை என்பதை விட நிறைய நல்ல விடயங்களை செய்து வருகின்றது.
குறிப்பாக போதைப்பொருள் பாவனை அற்ற இளம் சமூகத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
இது முழுமையாக நடக்கும் பட்சத்தில் மூவின் மக்களுக்கும் நல்லது நடக்கும் என எண்ணுகின்றோம்.
எமது நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் மட்டுமே காணப்படுகின்றது என புத்தஜீவிகள் உட்பட அனைவராலும் கூறினாலும் கூட விவசாயிகளை யாரும் ஒரு சதவீதமேனும் கருத்தில் கொள்வதாக தெரியவலில்லை.
குறிப்பாக விவசாயிகள் மழையிலும், விச ஜந்துக்களின் மத்தியில் விவசாயத்தினை மேற்கொண்டு நெல்லினை சந்தைப்படுத்துகின்றனர்.
இவ்வாறு சந்தைப்படுத்தப்படும் போது அரலிய, நிபுன, சூர்யா, மகிந்த ரத்தின இவ்வாறான நிறைய தென்னிலங்கை முதலாளி வர்க்கமானது இலங்கையில் உள்ள நெற்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்கின்றனர்.
மேலும் இவ்வாறு கொள்வனவு செய்த நெல்லினை பதப்படுத்தி தங்களது களஞ்சியங்களில், களஞ்சியப்படுத்துவதோடு நெல் விளைவிக்க முடியாத கால கட்டத்தில் அரிசியாக்கி அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறான நிலையில் அதனை தட்டிக்கேட்க வேண்டிய உரிமை அனுர அரசிற்கு இருக்கின்றது.
ஆனால் இவ் அரசு ஐஸ், கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் மற்றும் கள்வர்களை பிடிக்கின்றனர். இது ஒரு நல்ல விடயமாகும். இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
ஆனால் அன்றாடம் உணவாக இருக்கும் அரிசியினை தான்தோன்றிதனமாக விலையில் விற்பனை செய்வதை கண்டும் காணாமல் இருப்பது போல் தெரிகின்றது. இதற்கு என்ன காரணம் என்றும் எங்களுக்கு தெரியவில்லை.
தென்னிலங்கையில் அரசியினை பதுக்கி வைத்த நெல் மாபியாக்கள் 350 ரூபாவிற்கு கீரிச்சம்பாவினை விற்பனை செய்கின்றனர்.
இவ்விலையானது கொழும்பு வாழ் மக்களை பொறுத்த வரையிலே சிறிய தொகையாக காணப்படலாம். ஆனால் இதனை உற்பத்தி செய்யும் இப்பிரதேச மக்களை பொறுத்த வரையிலே பெரிய தெகையாக இருக்கின்றது.
குறிப்பாக விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த ஈர நெல்லினை 7,500 தொடக்கம் 8,000 ரூபாவிற்கும் உலர்த்தப்பட்ட நெல்லினை 9,000 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர்.
மேலும் தங்கள் உணவிற்காக அரிசியினை 350 ரூபாவிற்கு வேண்டி உட்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
இதில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு இதற்குரிய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நாடு பூராகவும் ஒரே நாளில் தேடுதலில் ஈடுபட்டு அரிசியினை பல்வேறு இடங்களில் பதுக்குபவர்களை பிடிக்க வேண்டும்.
மேலும் வவுனியாவினை பொறுத்த வரையிலே இங்குள்ள சமையல் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் தென்னிலங்கையில் உள்ள அலரிய, சூரியா, நீபலி அரிசிகளை தரவேண்டும் என்று சொல்வதோடு ஏனைய பெயர்களில் உள்ள அரிசிகளை கொண்டு தாங்கள் சமையல் செயற்பாட்டில் ஈடுபட மாட்டோம் என்கின்றனர். இதற்கு இவர்களிற்கும் தரகு பணம் வழங்கப்படுகின்றதோ தெரியாதுள்ளது.
இவ்வாறான நிலையில் இங்குள்ள சிறிய அரிசி ஆலைகளை வைத்திருப்பவர்கள் வங்கி கடன் உட்பட பல்வேறு கடன்களை செலுத்த முடியாமல் நஸ்டமடையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே அரசானது ஒரு சில அரிச மாபியாக்களின் களஞ்சியத்தை ஆராய்ந்து அவர்களின் இருப்பினை அரசு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதோடு, அரிசியினை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிற்கும் சரியான பாடத்தினை கொடுக்கும் பட்சத்தில் இலங்கையில் அரிசித்தட்டுப்பாடு ஏற்படாது.
அரிசி தட்டுப்பாடு வருவதை இவ் அரசு கண்டும் காணாமல் இருப்பதை பார்க்கும் போது விவசாய மக்களுக்கு பெரும் மன அழுத்தத்தை உருவாக்கியியுள்ளது.
குறிப்பாக வீட்டில் இருந்து நகைகளை வைத்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகள் விவசாய உபகரண விலை, பசளை, உழவு உட்பட ஏனையவற்றிற்கான விலை உயர்வுகளால் தங்கள் நகைகளை மீட்க முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் இருந்தால் வேறு விடயங்களிற்கு அக்கறை காட்டும் இவ் அரசாங்கமானது இதற்கும் முழு அக்கறை காட்ட வேண்டும்.
அத்தோடு போதைப்பொருள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கி எல்லோரும் தொழில் மேற்கொள்ளும் நிலைக்கு மாற்ற வேண்டும்.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் விவசாயம் மேற்கொள்வதற்கு யாருமே இல்லை. பண்ணை செய்வதற்கு யாரும் இல்லை.
கூலித்தொழில் செய்ய யாரும் இல்லை. இதற்கு காரணம் போதைப்பொருட்களை கைமாற்றுவதன் மூலமாக ஆயிரக்கணக்கில் பணம் ஈட்டுகின்றனர்.
இதனால் யாரும் கூலித்தொழில் செய்யவோ, சுயதொழில் செய்வதற்கோ முன்வருவதில்லை. நாடு நன்றாக வரவேண்டும் என்றால் இவ் அரசானது விவசாயத்தினை மேற்கொள்வதற்கான போதியளவு கவனத்தினை செலுத்த வேண்டும் என என தெரிவித்தார்.
