தேசிய உள்ளூராட்சி வாரத்தையொட்டி சபரகமுவ மாகாண சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்றையதினம் (15) பெல்மதுளை கனேகம ரன்கொத் ரஜமகா விகாரை வளாகத்தில் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இடம்பெற்றது.
இந்த உள்ளூராட்சி வாரம் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள இரத்தினபுரி மற்றும் கேகாலை மாநகர சபைகள், பலாங்கொடை, எம்பிலிபிட்டிய நகர சபைகள் மற்றும் 25 பிரதேச சபைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
நேற்றையதினம் (15) முதல் இம்மாதம் 21ஆம் திகதி வரை உள்ளூராட்சி வாரம் நடைமுறைப்படுத்தப்படும்.
மேற்படி உள்ளூராட்சி வாரத்தில், ஆரோக்கியம், விளையாட்டு, வருமானம் ஈட்டுதல், மற்றும் விழிப்புணர்வு உட்பட பல்வேறு விடயங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் நடைபெறும் இந்த உள்ளூராட்சி வாரத்தின் இம்முறை தொனிப்பொருள் “புத்துயிர்ப்பின் நகரம்” என்பதாகும்.
இந்த உள்ளூராட்சி வாரத்திற்காக உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள், காவல்துறை, விவசாய சேவைகள், நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் வழங்கல் உட்பட அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்துள்ளன.
மேற்படி இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றையதினம் (15) மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவுகள், குழந்தைகளுக்கு வங்கிக் கணக்குகள், பாடசாலை நூலகங்களுக்கான புத்தகத் தொகுதிகள் என்பனவும் வழங்கப்பட்டன.
அத்துடக கலை நிகழ்ச்சியும் இங்கு மேடையேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ, பெல்மடுல்ல பிரதேச சபைத் தலைவர் தர்மசிறி மானபுர, சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் சுனிதா, சபரகமுவ மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் கீர்த்தி பண்டார, பெல்மதுளை பிரதேச செயலாளர் சிதாரா ருவனி கமகே, லயன்ஸ் சங்கத்தின் தலைவர் பி.எஸ்.எல்.எம் காயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்