சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
அரிசி உற்பத்தியாளர்கள் கீரி சம்பா அரிசியை 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலையில் வழங்குவதால், அதை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருவதாக புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சில்லறை விற்பனையாளர்களும் கீரி சம்பா அரிசியை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறது.
எனினும், பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கையான அரிசி பற்றாக்குறையை உருவாக்கி இலாபம் ஈட்ட முயற்சிப்பதால், அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்று தேசிய விவசாயிகள் ஒன்றியம் கோருகிறது.