பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல, மாறாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் என்பதால் அவர்களும் நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் அண்மையில் (03) பாராளுமன்றத்தின் சபாநாயகர் தலைமையில் கொழும்பு ஆனந்தா கல்லூரி ஓல்கட் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இக்கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர்,
”அரசியல் பாதகமான விடயம் அல்ல என்றும், அரசியல் மூலம் மக்களின் இறைமையை பிரதிநிதித்துவப்படுத்தி, மக்களுக்காகவும், சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் தலைமைத்துவம் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, எதிர்கால இலங்கைக்கு அறிவு, புத்திசாலித்தனம் மற்றும் நல்ல மனப்பான்மைகளை வளர்த்துக் கொண்ட தலைவர்கள் மேலும் தேவைப்படுவதால், மாணவர் பாராளுமன்றத்தை தமது அறிவு, திறன்கள் மற்றும் மனப்பான்மைகளை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட சபாநாயகர், அனைவரும் நேர்மையான மற்றும் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட பிரஜைகளாக மாறுவதன் முக்கியத்துவத்தையும்” வலியுறுத்தினார்.
மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா,
”மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும் மாணவர் பாராளுமன்றங்கள் ஒரு சிறந்த பிரதிபலிப்பு என்று சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சட்டவாக்க செயன்முறை மற்றும் பணிகள் தொடர்பில்” மாணவர்களுக்கு அவர் விளக்கமளித்தார்.
மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பதில் இந்த வேலைத்திட்டம் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது என்றும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பிற்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் அதிபர் டி.எம்.சி.பி. திசாநாயக்க திலகரத்ன கருத்துத் தெரிவித்தார்.
அதன் பின்னர், மாணவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வு ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து சபாநாயகர் நியமிக்கப்பட்டு பதவியேற்றார், அத்துடன் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, மாணவர் பாராளுமன்ற பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்ததன் பின்னர், மாணவர் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
