சம்மாந்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் கனரக வாகன சாரதிகளுக்கு நேற்று (05) வெள்ளிக்கிழமை சாரதிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
வாகனங்களினால் பயணிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பொருத்தப்பட்டுள்ள உதிரி பாகங்களை அகற்றவும், ஹேண்ட் பிரேக், சிக்னல் விளக்குகள், முகப்பு விளக்குகள் உள்ளிட்ட மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் வாகனம் ஒன்றை இயக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள 21 விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, பழுதடைந்த வாகனங்கள் சில பொலிஸாரால் அவதானிக்கப்பட்ட நிலையில், குறைபாடுகளை சரிசெய்ய சாரதிகளுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
சாரதிகள் தங்களது வாழ்க்கையையும், பிறர் வாழ்வையும் பாதுகாக்க பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியதன் முக்கியம் பற்றி பொலிஸ் அதிகாரிகளினால் அறிவுரைகளும் வழங்கப்பட்டது.
மேலும், பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் நேரத்திலும், முடிவடையும் நேரத்திலும் வாகனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கியதுடன் இதனை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
போக்குவரத்து ஒழுங்கும், விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இவ்விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையானது, கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய, அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வெதமுல்ல மேற்பார்வையில், அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறி கட்டளையின் பிரகாரம், அம்பாரை மாவட்ட கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விஜேரத்ன, போக்குவரத்து பிரிவு பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.
-தில்சாத் பர்வீஸ்
