அரசியல்உள்நாடு

குறைந்த விலைக்கு பொஸ்பேட் விற்பனை – மனுவை விசாரிக்க அனுமதி

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் எப்பாவல பொஸ்பேட் படிவிலிருந்து பொஸ்பேட் தொகையை நிலையான விலையை விட குறைந்த விலைகளில் தமது சில நட்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்காக விநியோகித்தமை ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுப்பதற்காக உயர் நீதிமன்றும் இன்று (01) அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையத்தால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள், புவிச் சரிதவியல் அளவை சுரங்க பணியகம், அதன் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 32 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர்.

இந்த மனு இன்று நீதியரசர்களான ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் பரிசீலிக்கப்பட்டது.

எப்பாவல பொஸ்பேட் தொகை படிவம் தொடர்பாக 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவை மீறி லங்கா பொஸ்பேட் நிறுவனத்தால், பொஸ்பேட் தொகை பெறப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் டொன் பொஸ்பேட்டுக்கான உரிய விலையை விட மிகக் குறைந்த விலையில் பொஸ்பேட் தொகையை தங்களுக்கு நெருக்கமான பல நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய பிரதிவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதன் ஊடாக அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதாக மேலும் அவர் குற்றம் சாட்டினார்.

பொஸ்பேட் வழங்குவதற்குத் தேவையான உரிமங்களை வழங்குமாறு புவிச் சரிதவியல் அளவை சுரங்க பணியகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு இந்த விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, குறித்த மனுவை எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு திகதியிட்டது.

Related posts

கொழும்பு வரை அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

தேர்தல் முடிவுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் இலவச PCR பரிசோதனை