அரசியல்உள்நாடு

பொத்துவில் கல்வி வலய விவகாரம் – உதுமாலெப்பை எம்.பியின் அறிக்கையை மறுக்கிறார் ஆதம்பாவா எம்.பி

பொத்துவில் தனிக் கல்வி வலயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை யினால் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கவிந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ஏ.ஆதம்பாவா ஆகியோர் எதிர்ப்பு என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான உதுமாலெப்பை, வாசித் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஸாரப் ஆகியோர் பொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம் அமைப்பதற்கான தீர்மானத்தினை நிறைவேற்றுமாறு கோரிக்கை என்றும் வெளியான செய்திக்கு போலியான செய்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பி ஏமாறவும் வேண்டாம். மக்களை மடையர்கள் என நினைத்து சில அரசியல்வாதிகள் தமக்கு ஏற்றா போல் போலியான செய்திகளை பரப்பும் வங்குரோத்து அரசியலை வன்மையாக கண்டிக்கிறேன் என தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில் மேலும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி , சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் (26.08.2025) அம்பாறை கச்சேரியில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை உரையாற்றுகையில், பொத்துவில் – உகன பிரதேசங்களுக்கான தனி கல்வி வலயங்களை அமைப்பது தொடர்பாக நீண்ட காலமாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் பொத்துவில் – உகன கல்வி வலயங்கள் தொடர்பாக நான் வாய்மொழி மூலம் கேள்வியினை கேட்ட போது, பொத்துவில், உகன கல்வி வலயங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் இடமிருந்து பரிந்துரை கிடைக்கவில்லை என்றும் அவரது கடிதம் கிடைத்ததும் பொத்துவில் – உகன பிரதேசங்களுக்கான கல்வி வலயங்களை உருவாக்கும் செயற்பாடுகள் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் பதில் தெரிவித்தார்.

இதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் பிரதமரை சந்தித்து ஆளுநரின் கடிதம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கடிதங்களை கையளித்தோம்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பொத்துவில் – உகன புதிய கல்வி வலயங்கள் தொடர்பாக முன்மொழிவுகளை சமர்ப்பித்து தீர்மானம் ஒன்றை தனக்கு அனுப்புமாறு பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைய, இன்று இம்முன்மொழிவுகள் தன்னால் முன்வைக்கப்பட்டது எனவும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு பொத்துவில் – உகன பிரதேசங்களுக்கான புதிய கல்வி வலயங்களை அமைப்பதற்கான பணிந்துரை வழங்கினால் கல்வி அமைச்சு அது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித் கருத்து தெரிவிக்கையில்,
பொத்துவில் பிரதேசத்திற்கான புதிய கல்வி வலயக் கோரிக்கையானது நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டுள்ள விடயமாகும் எனவே, பொத்துவில் தனிக் கல்வி வலயத்தை உருவாக்குவதற்கான அனுமதியினை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஸாரப் கருத்து தெரிவிக்கையில்,
பொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம் தொடர்பான விடயம் கடந்த அரசாங்க காலங்களில் கல்வி அமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் கிழக்கு மாகாண ஆளுநரும் பரிந்துரை செய்து மத்திய கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா கருத்து தெரிவிக்கையில்,
பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்தினை நீங்கள் ஆளும் கட்சியாக இருந்த போது நீங்கள் நிறைவேற்றியிருக்கலாம் தானே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முஸாரபிடம் கேள்வி எழுப்பியதுடன் விவாதத்திலும் ஈடுபட்டார்.

தற்போது இதனை உங்களால் செய்ய முடியாது எனவும் நாங்கள் ஆளுங்கட்சி எனக்கூறி தனது கண்டனத்தையும் ஆதம்பாவா எம்பி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
பொத்துவில் தனிக் கல்வி வலயம் அமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது எனவும் திருக்கோவில் கல்வி வலயம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இவரது கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பொத்துவில் தனிக் கல்வி அமைப்பதற்கு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அனுமதி வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் தவிசாளருமான முஸாரப் கோரிக்கை விடுத்தார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில்,
பொத்துவில் – உகன பிரதேச மக்களினது நீண்ட கால நியாயமான கோரிக்கையினை நிறைவேற்றும் தூய எண்ணத்துடன் தன்னால் இம் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் நாங்கள் ஒரு போதும் இனவாத ரீதியான செயற்பாடுகளை முன்வைக்கவோ, அங்கீகரிக்கவோ மாட்டோம் எனவும் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு எதிராக இம்முன்மொழிவுகள் முன்வைக்கப்படவில்லை என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் – உகன ஆகிய இரண்டு கல்வி வலயங்களே புதிதாக உருவாக்க வேண்டியுள்ளன.

புதிய கல்வி சீர்திருத்தத்தின்படி எவ்வாறு கல்வி வலயங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதனை மத்திய கல்வி அமைச்சுதான் தீர்மானம் மேற்கொள்ளும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனரீதியான கருத்துக்களை துறை சார்ந்த அதிகாரிகள் வீற்றிருக்கும் இச்சபையில் முன்வைக்காமல் கௌரவமான முறையில் தங்களது கருத்துக்களை மொழிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

பொத்துவில் கல்வி வலயம் தொடர்பாக நீண்ட நேரமாக நடைபெற்ற சூடான விவாதத்தின் பின்னர் பிரதி அமைச்சர் வசந்த பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,
பொத்துவில் – உகன கல்வி வலயங்கள் அமைப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவானது நியாயமானதாக உள்ளதாகவும் இப்புதிய கல்வி வலயங்களை உருவாக்குவது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகளும் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

என்று குறிப்பிடப்பட்டிருந்தது இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது.

-நூருல் ஹுதா உமர்

Related posts

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் இல்லை

வுஹானில் இருந்து வந்த 33 மாணவர்களும் வீடு திரும்புகின்றனர்

ரிஷாட், பொலிஸ்மா அதிபரிடம் விடுத்த கோரிக்கை