வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த 3 இலங்கையர்கள் இன்று (27) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ரூ. 45.9 மில்லியன் மதிப்புள்ள சிகரெட்டுகளை கடத்த முயற்சித்தபோதே இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் 24,28,30 வயதான கொழும்பு, மட்டக்குளி, அவிசாவளையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர்கள் சிகரெட்டுகளை துபாயில் வாங்கி, கட்டாரின் தோஹாவிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து அதிகாலை 2.05 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் QR-662 மூலம் நாட்டுக்குள் கொண்டு வர முயன்றுள்ளனர்.
இதன்போது அவர்கள் கொண்டு வந்த 15 பொருட்களுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட சுமார் 1503 சிகரெட் அட்டைப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்ததுடன், சந்தேகநபர்களை கைது செய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.