2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் நடந்த ‘கோட்டா கோ காமா’ போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27) அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி, சந்தேகநபர் தேசபந்து தென்னகோனை தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதி வழங்கிய நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என சந்தேகநபருக்கு மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
அழைக்கப்படும் போதெல்லாம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணைக்கு உதவ வேண்டும் என்றும், அத்தகைய அழைப்பைத் தவிர்க்கும் பட்சத்தில், பிணை இரத்து செய்யப்பட்டு சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்த முறைப்பாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.